Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புரட்டாசி 3வது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம்: உத்திரமேரூர் பஜனை கோயிலில் இன்று கருடசேவை உற்சவம்

உத்திரமேரூர்: புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையை முன்னிட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட பெருமாள் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில், உலகளந்த பெருமாள், யதோத்தக்காரி பெருமாள், அஷ்டபுஜ பெருமாள், அழகிய சிங்கப்பெருமாள், உத்திரமேர் ஸ்ரீஆனந்தவல்லி சமேத சுந்தர வரதராஜ பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவபெருமாள், கூழமந்தல் பேசும் பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

உத்திரமேரூர் பேரூராட்சி கருணீகர் தெருவில் உள்ள ஸ்ரீபஜனை கோயிலில், 29ம் ஆண்டு கருடசேவை உற்சவம் இன்று காலை வெகு விமரிசையாக நடந்தது. இதை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள், ஸ்ரீதேவி பூதேவிகளுடன் கோயில் வளாகத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சிறப்பு பூஜைகள் முடிந்தபின் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா புறப்பட்டார். மாட்டு வண்டியில் புறப்பட்ட இந்த வீதியுலா, கருணீகர் தெரு, திருமலையா பிள்ளை தெரு, பஜார் வீதி, செங்குந்த பிள்ளையார் கோயில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மீண்டும் கோயிலை வந்தடைந்ததும் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அறுசுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாகுழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் சிங்கபெருமாள் கோயில், பாடலாத்திரி நரசிங்கபெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனை நடந்தது. இதுபோல் செங்கல்பட்டு பகுதியில் உள்ள வேதாந்த தேசிக பெருமாள் கோயில், மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள், திருவிடந்தையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள், பழைய சீவரத்தில் உள்ள நரசிங்கபெருமாள் கோயில், மதுராந்தகத்தில் உள்ள ஏரிகாத்த ராமன் கோயில், பொன்விளைந்த களத்தூரில் உள்ள கோதண்டராமர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு தரிசனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டனர்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் மற்றும் திருவள்ளூர், சத்தியமூர்த்தி தெருவில் உள்ள பத்மாவதி தாயார் சமேத, பிரசன்ன ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மீஞ்சூர் அடுத்த தேவதானம் கிராமத்தில் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி பெருமாள் கோயிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் ரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரமும் பூஜைகளும் நடைபெற்றது. மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து ரங்கநாதர் பெருமாளை வழிபட்டனர்.