அடிக்கடி ஏற்படும் விபத்துகள்; புன்னார்க்குளம் வளைவு சாலை நேராக்கப்படுமா?... சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
அஞ்சுகிராமம்: அஞ்சுகிராமம் - வழுக்கம்பாறை நெடுஞ்சாலை மிக முக்கியமானதாக விளங்கி வருகிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் வாகனங்கள் பயணிக்கின்றன. மேலும் இந்த வழித்தடத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இயங்கிவரும் அணு மின் நிலையத்திற்கு தேவையான உபகரணங்களை கொண்டு செல்ல இந்த வழித்தடத்தையே பயன்படுத்துகின்றனர். மிகவும் பிரசித்திபெற்ற ஆன்மீக தலங்களான உவரி, ஆற்றங்கரை பள்ளிவாசல், திருச்செந்தூர், ராமேஸ்வரம், குலசேகரப்பட்டினம், தூத்துக்குடி விமான நிலையம் செல்பவர்கள் இந்த வழித்தடத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இத்தகைய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் அமைந்துள்ளது புன்னார்க்குளம் சந்திப்பு. இதன் அருகில் இருபுறங்களில் இருந்தும் 2 ஊரக சாலைகள் சந்திப்பதாலும், ஏராளமான வாகனங்கள் வந்து செல்வதாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் புன்னார்க்குளம் சந்திப்பில் சாலை மிகவும் குறுகிய வளைவாக ‘எஸ்’ வடிவில் செல்வதால் ஒருபுறத்தில் இருந்து வரும் வாகனங்கள் மறுபுறத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு தெரிவதில்லை. இதனால் இங்கு அடிக்கடி விபத்துகளும், உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன.
நாளுக்கு நாள் பெருகி வரும் வாகன அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் அகலமாக இந்த சாலை இல்லை. ஆங்காங்கே ஆக்ரமிப்புகளும் உள்ளன. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த சாலையை நேராக செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

