பஞ்சாபில் தேர்தல் நெருங்கும் நிலையில் 3 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியம்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பின்னடைவு
புதுடெல்லி: பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் திடீரென பாஜகவில் இணைந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி முதற்கட்டமாக 40 வேட்பாளர்களை அறிவித்து அரசியல் களத்தை சூடாக்கியது. இந்த சூழலில் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக சமனா தொகுதி எம்.எல்.ஏ. சேத்தன் சிங் ஜோரமஜ்ரா, சனூர் தொகுதி எம்.எல்.ஏ. ஹர்மீத் சிங் பதான்மஜ்ரா மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரியான அமிர்தசரஸ் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. குன்வர் விஜய் பிரதாப் சிங் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து குன்வர் விஜய் பிரதாப் சிங் மற்றும் பதான்மஜ்ரா ஆகிய இருவரின் எம்.எல்.ஏ. பதவிகளுக்கான ராஜினாமா கடிதங்களை பஞ்சாப் சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான் உடனடியாக ஏற்றுக்கொண்டார். மேலும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி ஜோரமஜ்ராவுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் முறைப்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலின் ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் 3 பேர் பாஜகவுக்கு தாவியதால், அம்மாநில தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.


