Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புங்கத்தூரில் இருந்து சேலை கிராமம் வரை வண்டிப் பாதையை ஆக்கிரமித்த கடை, வீடுகள் இடித்து அகற்றம்: ஜேசிபி டிரைவர் மீது கல்வீச்சு; போலீசுடன் மக்கள் மோதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள புங்கத்தூரில் இருந்து சேலை கிராமம் வரை வண்டிப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டது. அப்போது ஜேசிபி டிரைவர் மீது கல்வீசியதுடன் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். ‘’திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டு புங்கத்தூரில் இருந்து சேலை கிராமம் செல்லும் சாலை வரை வண்டிப்பாதையை ஆக்கிரமித்தும் சுமார் 3 அடி பட்டா நிலத்தில் தகடு சீட்டுகளால் கடை மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. எனவே, அவற்றை அகற்றவேண்டும்’’ என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் பட்டா நிலத்தின் உரிமையாளர் திலகவதி மனோகரன் ஒரு மனு கொடுத்தார்.

இதையடுத்து கலெக்டர் ச.கவிதா உத்தரவின்படி, வட்டாட்சியர் வி.சரண்யா விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நகராட்சி ஆணையருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து நகராட்சி ஆணையர் சரவணன் தலைமையில், நகரமைப்பு அலுவலர் நிர்மலா தேவி, நகரமைப்பு ஆய்வாளர் தீப்தி ஆகியோர் வருவாய்த்துறையினருடன் வந்து ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன், சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அப்போது அந்த பகுதி மக்கள் வந்து, ‘’தாங்கள் 30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வீடுகளுடன் சேர்ந்திருக்கும் கடையை இடிக்க உள்ளனர். எனவே, காலஅவகாசம் வழங்க வேண்டும்’’ என்று கூறியதுடன் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘’3 முறை நோட்டீஸ் வழங்கியிருப்பதாகவும் காவல்துறையினர் பாதுகாப்புக்கு வராத காரணத்தால் 2 முறை ஆக்கிரமிப்பு அகற்ற முடியவில்லை’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்பிறகு ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆக்கிரமிப்பு அகற்ற முற்பட்டபோது காவல்துறையினருக்கும் வீட்டின் உரிமையாளர்கள், உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் அகற்றப்பட்டன.

இதனால் ஆத்திரம் அடைந்த வீட்டு உரிமையாளர்கள், அங்கு கிடந்த கற்களை எடுத்து வந்து ஜேசிபி ஓட்டுநர் மீது வீசினர். இதனால் காவல்துறையினர் வந்து தடுத்தபோது காவல் துறையினருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டு அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அப்போது அதிகாரிகள், ‘’வீட்டுமனையின் உரிமையாளர் கொடுத்த புகாரின்படி, வருவாய் துறை சார்பில் நில அளவை துறையினர் அளவீடு செய்து வண்டிப்பாதையை ஆக்கிரமித்துள்ளதாக கொடுத்த தகவல்படி, ஆக்கிரமிப்புகள் அகற்ற வந்தோம்’ என்றனர். இதன்பின்னர் வீட்டின் உரிமையாளர்கள் தானான முன்வந்து வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வெளியை வைத்தனர். தகடு சீட்டில் போடப்பட்டிருந்த வீட்டை அகற்றினர்.