புனே அருகே நவாலே பாலத்தில் பயங்கரம் கார்கள் மீது லாரி மோதி தீப்பிடித்து 8 பேர் கருகி பலி: 15 பேர் படுகாயங்களுடன் அனுமதி
புனே: புனேயில் மும்பை பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள நவாலே பாலத்தில் சென்ற கன்டெய்னர் லாரி தறி கெட்டு ஓடி, முன்னால் சென்ற மற்றொரு கன்டெய்னர் லாரி மீது மோதியது. அந்த லாரி அடுத்தடுத்து 6 கார்கள் மீது மோதி தீவிபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்தவர்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். விபத்து குறித்து அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், தீயணைப்பு படை உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில் அவர்களை மீட்ட போலீசார், ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் விபத்தில் பலியானவர்கள் விவரம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். தீவிபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
