Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதுக்கோட்டை அருகே என்கவுன்டரில் சுட்டுகொல்லப்பட்ட ரவுடி துரை கோடிக்கணக்கில் சொத்து வாங்கி குவிப்பு

* கொள்ளையடிக்க ஸ்கெட்ச் போட்டு கொடுத்த கள்ளக்காதலி,

* தென்மாவட்ட கூலிப்படைகளுக்கு தலைவனாக செயல்பட்டது அம்பலம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி துரை கூலிப்படை தலைவனாக செயல்பட்டு வந்ததோடு, கோவையில் கோடிக்கணக்கில் சொத்துகள் வாங்கி குவித்து இருந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் துரை (எ) துரைசாமி (42). திருச்சியில் ‘ஏ பிளஸ்’ ரவுடி பட்டியலில் இருந்த இவர் மீது கோவை, சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, தேனி உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் 74 வழக்குகள் உள்ளன.

4 கொலை வழக்கில் ஒன்றில் விடுதலையாகி உள்ளதாக தெரிகிறது. 3 கொலை வழக்கு உட்பட 57 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

புதுக்கோட்டையில் ஒரு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு பிடியாணை பிறக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் தேடி வந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் -வம்பன் பகுதிக்கு இடையே உள்ள தைலமர காட்டுக்குள் பதுங்கி இருப்பதாக நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. ஆலங்குடி போலீசார் அங்கு சென்றபோது எஸ்.ஐயை வெட்டிவிட்டு தப்பமுயன்ற ரவுடியை போலீசார் தற்காப்புக்காக சுட்டத்தில் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் ரவுடி துரை உடலை பார்க்க அனுமதி கேட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், துரையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் நேற்று மாலை 5 மணிக்கு ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட ரவுடி துரை, பல ஆண்டுகளாக திருச்சியில் வசித்து வந்தார். இவரது சகோதரர் சோமு (எ) சோமசுந்தரம் (38). இருவரும் ரவுடிகள். சோமு மீது உள்ள 23 வழக்குகளும் திருச்சி உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.

இருவரையும் திருச்சியில் கடந்தாண்டு பிப்.20ம் தேதி மடக்கி பிடித்தனர். பின்னர் திருச்சி உய்யாக்கொண்டான் திருமலை குழுமாயி அம்மன் கோயில் அருகே வயலில் உள்ள புதரில் பதுக்கப்பட்ட இருந்த கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் உள்ளிட்ட பொருட்களை மீட்க இருவரையும் போலீசார் அழைத்து சென்றனர். அப்போது ரவுடிகள் இரண்டு பேரும் போலீஸ் ஜீப்பின் டிரைவர் சந்திரசேகரின் கழுத்தை பிடித்து நெறித்துள்ளனர். இதில், நிலைதடுமாறிய தடுப்பு கம்பி மீது மோதியது.

உடனே போலீசாரை வெட்டி விட்டு தப்பி செல்ல முயன்ற இருவரையும் துப்பாக்கியால் போலீசார் சுட்டு பிடித்தனர். ரவுடி துரைக்கு கள்ளக்காதலி ஒருவர் உள்ளார். கொள்ளையடிக்கும் முன்பு கள்ளக்காதலிடம் அறிவுரை மற்றும் ஸ்கெட்ச் குறித்து விவரங்களை கேட்ட பின்னர் தான் துரை கொள்ளை மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கொள்ளையடிக்கப்படும் பணம் மற்றும் பொருட்களை கள்ளக்காதலியிடம் கொடுப்பதே வழக்கமாக வைத்துள்ளார்.

இதனால் துரை சம்பந்தமான வழக்குகளை அவரது கள்ளக்காதலி பார்த்து வந்தார். கள்ளக்காதலியின் மகனும், திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடியுடன், துரை நெருக்கமாக இருந்து வந்துள்ளார். முக்கியமாக, தென்மாவட்டங்களில் கூலிப்படைகளுக்கு தலைவனாகவும் செயல்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் நெல்லையில் கொல்லப்பட்ட வாலிபரின் கொலை வழக்கில் தொடர்புயைட நபரை தென் மாவட்டத்துக்கு அழைத்து சென்று அங்கு அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

முக்கிய நபர்களின் கொலை வழக்கில் பின்புலத்தில் துரை உள்ளார். சமீபத்தில் திருச்சியில் என்கவுன்டர் செய்யப்பட்ட திருவெறும்பூரை சேர்ந்த ரவுடி கொம்பன் ஜெகனும், துரையும் கூட்டாளிளாக இருந்ததாக கூறப்படுகிறது. ரவுடி துரை பகல் நேரங்களில் மட்டும் தான் வீடுகளை உடைத்து கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். திருச்சியில் இருந்து தென்மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார்.

கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ள ரவுடி துரை, இந்த பணத்தை முழுவதும் கோவையில் பிளாட்டுகள் மற்றும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, பல்வேறு பெயர்களில் கோவையில் கோடிக்கணக்கில் ரவுடி துரை சொத்துக்களை வாங்கி குவித்துள்ளராம். இவைகள் அனைத்து திருச்சியில் உள்ள ரவுடி துரையின் கள்ளக்காதலிக்கு தெரியும். கோடிக்கணக்கில் உள்ள சொத்துக்களை கள்ளக்காதலி கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ரவுடி துரை வாங்கி குவித்துள்ள சொத்து விவரங்களை கணக்கெடுக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது என்றனர்.

* ரவுடி துரையின் அக்கா மகன் துப்பாக்கியுடன் கைது

திருச்சி திருவெறும்பூரை சேர்ந்தவர் ஐயப்பன். இவர், நேற்றுமுன்தினம் இரவு துவாக்குடி அடுத்த பழங்கனாங்குடி பிரிவு சாலையில் பைக்கில் மாமனார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த வாலிபர், பைக்கை வழிமறித்து ஐயப்பன் கழுத்தில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின், வாட்ச் ஆகியவற்றை பறித்து சென்றார்.

இதுதொடர்பாக ஐயப்பன் கொடுத்த புகாரின்பேரில் துவாக்குடி போலீசார் விசாரணை நடத்தியதில், வழிப்பறியில் ஈடுபட்டது புதுகையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட துரையின் அக்கா மகன் வெள்ளைச்சாமி (எ) பிரதீப்குமார்(29) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து பிரதீப்குமாரை கைது செய்து அவரிடமிருந்து கைத்துப்பாக்கி, கார், தங்க செயினை பறிமுதல் செய்தனர்.

* கலக்கும் எஸ்பி தம்பதி

திருச்சி மாவட்ட எஸ்பியாக இருப்பவர் வருண்குமார். இவரது மனைவி வந்திதா பாண்டே புதுகை எஸ்பியாக உள்ளார். இருவரும் ரவுடிகளை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஏற்கனவே ரவுடி கொம்பன் ஜெகன், திருச்சி அருகே என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், இப்போது வந்திதா பாண்டே பணிபுரியும் புதுகையிலும் என்கவுன்ட்டர் நடந்துள்ளது.

எஸ்பி தம்பதியின் இந்த அதிரடி நடவடிக்கைகயால் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. ரவுடிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்து வருவதால், ரவுடிகள் அனைவரும் கலக்கத்தில் இருந்து வருகின்றனர். இதில் பெரும்பாலான ரவுடிகள் வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டனர்.

* கொள்ளையடிக்கப்படும் பணம் மற்றும் பொருட்களை கள்ளக்காதலியிடம் கொடுப்பதே ரவுடி துரை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் துரை சம்பந்தமான வழக்குகளை அவரது கள்ளக்காதலி பார்த்து வந்தார். கள்ளக்காதலியின் மகனும், திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார்.

* கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ள ரவுடி துரை, இந்த பணத்தை முழுவதும் கோவையில் பிளாட்டுகள் மற்றும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, பல்வேறு பெயர்களில் கோவையில் கோடிக்கணக்கில் ரவுடி துரை சொத்துக்களை வாங்கி குவித்துள்ளராம்.