புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தவெக வேட்பாளர் முருகேசனுக்கு சொந்தமான கல் குவாரிக்கு சீல் வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர், பொம்மாடி மலைப் பகுதியில் தனக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில், 10 ஏக்கர் பரப்பளவில் கல் குவாரி நடத்தி வருகிறார். இந்த குவாரி எவ்வித உரிய அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இக்குவாரியில் ஆய்வு நடத்துவதற்காகப் புதுக்கோட்டை மாவட்ட அதிகாரிகள் அங்குச் சென்றுள்ளனர்.
முறையான அனுமதி உள்ளதா என இந்தக் கல்குவாரியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, எவ்வித அனுமதியுமின்றி குவாரி இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, கல் உடைக்கப் பயன்படுத்தப்பட்ட 4 கம்ப்ரெசர்கள் மற்றும் ஹிட்டாச்சி வாகனத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுரங்கத்துறை அதிகாரிகள் காவல்துறையினருக்குப் பரிந்துரைத்துள்ளனர்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தவெக நெசவாளர் அணி அமைப்பாளரான முருகேசன், விராலிமலை சட்டமன்றத் தொகுதியின் தவெக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இந்நிலையில், உரிய அனுமதியின்றி அவர் நடத்தி வந்த கல் குவாரிக்குச் சுரங்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி, செயல்படக் கூடாது எனச் சீல் வைத்துள்ளனர்.
