Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி போலீஸ் விதிமுறைகளை மீறிய தவெகவினர்: ஆட்கள் குறைந்ததால் பாஸ் இல்லாதவர்களையும் அனுமதித்த நிர்வாகிகள்; அப்செட்டில் 11 நிமிடங்களிலேயே பேச்சை முடித்துவிட்டு விஜய் எஸ்கேப்

புதுச்சேரி: புதுவையில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் போலீஸ் விதிமுறைகளை தவெக தொண்டர்கள் மீறினர். ஆட்கள் குறைந்ததால் பாஸ் இல்லாதவர்களையும் அனுமதித்தனர். இருப்பினும், எதிர்பார்த்த கூட்டம் இல்லாததால் 11 நிமிடங்களிலேயே பேச்சை முடித்துவிட்டு விஜய் புறப்பட்டு சென்றார். தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக தவெக தலைவர் விஜய் பிரசாரம் நடத்தி வந்தார். செப்டம்பர் 27ம்தேதி கரூர் ரோடு ஷோவில் 41 பேர் பலியான சம்பவத்துக்குப்பின் ரோடு ஷோ நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த மாதம் காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதையடுத்து புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த தவெகவினர் அனுமதி கேட்டனர். முதல்வர் ரங்கசாமியை 4 முறை தவெக நிர்வாகிகள் சந்தித்து பேசியும் ரோடு ஷோவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. கடைசியாக ஒன்றரை கிலோ மீட்டருக்காவது ரோடு ஷோ நடத்த தவெக சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், ரோடு ஷோவுக்கு அனுமதியே கிடையாது என திட்டவட்டமாக மறுத்த காவல்துறை, 31 கட்டுப்பாடுகளுடன் திறந்த வெளியில் டிச. 9ம்தேதி மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதித்தது. கூட்டத்தை காலை 10 மணிக்கு துவங்கி 12.30 மணிக்குள் முடித்துவிட வேண்டும்.

கியூ.ஆர். கோடுடன் கூடிய பாஸ் வழங்கி 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர்களை அனுமதிக்க கூடாது. கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு அனுமதியில்லை. அடிப்படை தேவையான குடிநீர், கழிப்பிட வசதி செய்திருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் செல்ல தனி வழி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 31 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து புதுச்சேரி, உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தவெகவினர் செய்தனர். புதுச்சேரி காவல்துறை அறிவுறுத்தலின்படி மக்கள் நெரிசலின்றி வந்து செல்ல வசதியாக பொதுக்கூட்டம் நடக்கும் ஹெலிபேடு வளாகத்தில் சுற்றுச்சுவரை இடித்து கூடுதலாக 2 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன.

கூட்டம் நடக்கும் மைதானத்தை சுற்றி உள்ள மரங்கள், கட்டிடங்கள், மின் கம்பங்கள், சுவர்கள் மீது யாரும் ஏறக்கூடாது என 11 கட்டுப்பாடுகளை விஜய் விதித்திருந்தார். ஆனால், நேற்று நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் எந்த கட்டுப்பாடுகளையும் தவெகவினர் பின்பற்றவில்லை. விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக காவல்துறை உப்பளம் சாலையில் போக்குவரத்தை தடை செய்திருந்தது. இதனால் அங்குள்ள 2 தனியார் பள்ளிகள் நேற்று மூடப்பட்ட நிலையில், சீனியர் எஸ்பி கலைவாணன் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கூட்டம் நடந்த இடத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பில் ஈடுபட்டு காலை 7 மணி முதல் கியூஆர் கோடு பாஸ் உள்ளவர்களை மட்டும் மைதானத்திற்குள் அனுமதித்தனர். நேரம் செல்ல செல்ல பாஸ் இல்லாமல் அதிக எண்ணிக்கையில் தவெக தொண்டர்கள் திரண்டனர். பலர் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து கூட்டத்துக்கு உள்ளே சென்றனர். அருகில் உள்ள மரங்களிலும் ஜென்சி ரசிகர்கள் ஏறி ஆட்டம் போட்டனர். போலீசார் அறிவுரை கூறி இறங்க சொல்லியும் இறங்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை என காவல்துறை தெரிவித்திருந்தது.

ஆனால் அதை மீறி தமிழக தவெக நிர்வாகிகளுக்கு பாஸ் வழங்கப்பட்டிருந்தது. சில இடங்களில் தவெக விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கான பாஸ் ரூ.500, ரூ.1000க்கு விற்கப்படுவதாக தகவல் பரவியது. இதனால் மாநில எல்லைகளில் இரு மாநில போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே கியூஆர் கோடு உடனான டோக்கன் கொடுக்கும்போது ஒரு டோக்கனுக்கு 2 பேர் வரை வரலாம் என தவெக நிர்வாகிகள் சிலர் கூறியதாக தகவல் பரவியது. இருப்பினும் அதை ஏற்காத போலீசார், நுழைவாயில்களில் பாஸ் இல்லாமல் நுழைய முயன்றவர்களை தடுத்து திருப்பி அனுப்பினர். தொண்டர்களில் சிலர் நுழைவாயில் கேட்டில் ஏறி உள்ளே குதிக்க முயன்றனர்.

போலீசார் எச்சரித்தும், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அத்துமீறியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பாஸ் இல்லாதவர்கள் மைதானத்தை ஒட்டிய காம்பவுண்டு சுவரில் ஏறி குதித்து உள்ளே ஓடினர்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை பனையூர் வீட்டில் இருந்து காலை 8 மணிக்கு காரில் விஜய் புறப்பட்டார். கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு விஜய் நெருங்கிய நிலையில், அங்கு கூட்டம் கூடாததால் நிர்வாகிகள் அப்செட் அடைந்தனர். இதனால், பாஸ் இல்லாதவர்களை போலீசார் அனுமதிக்க வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் மைக்கில் கூறினார். திபுதிபுவென தொண்டர்கள், போலீசாரை தள்ளிவிட்டு உள்ளே வந்தனர். கூட்டத்துக்கான பாஸை புதுவை முழுவதும் கூவி கூவி கொடுத்தாலும் மக்கள் யாரும் வாங்காததால் தான் கூட்டம் கூடவில்லை.

இந்த கூட்டத்தில் கூடுதலாக தமிழகத்தில் இருந்து தவெகவினர் கலந்து கொண்டனர். அவ்வாறு வந்தவர்களை புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் நுழைவாயிலில் இருந்து ஒவ்வொருவராக அழைத்தனர். இதை பார்த்த போலீசார், பாஸ் இல்லாமல் உள்ளே சென்றவர்களை தரதரவென இழுத்து வெளியே போட்டனர். புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளை போலீசார் கடுமையாக எச்சரித்தனர். இதனால் என்ன பேசுவது என தெரியாமல் அந்த இடத்தை விட்டு புஸ்ஸி ஆனந்த் தப்பினார். ஓரளவுக்கு கூட்டம் கூடியதும் மைதானத்துக்கு 10.15 மணியளவில் விஜய் வந்தார்.

ஏற்கனவே அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த பிரசார வாகனத்தில் ஏறிய அவர், கூட்டம் சேராததால் வாகனத்திலேயே ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தார். பின்னர் மேலே ஏறி நின்று உரையாற்றினார். 41 பேர் பலிக்கு பின் முதல் பொதுவெளி கூட்டம் என்பதால் விஜய்யின் பேச்சை கேட்க தொண்டர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால், தமிழகத்தில் உளறி கொட்டியதை போல் புதுச்சேரியிலும் என்ன திட்டம் அரசு செயல்படுத்துகிறது என தெரியாமல் பொய்யை பேசினார். பேப்பரை பார்த்து பேசிய விஜய், தனது உரையை 11 நிமிடம் 37 செகண்டில் முடித்துவிட்டு வழக்கம்போல் கேரவனுக்குள் சென்றுவிட்டார். இதனால், ரசிகர்கள், தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.

* துப்பாக்கியுடன் வந்தவர் சிக்கினார்

தவெக கூட்டத்திற்கு வந்தவர்களை போலீசார் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது ஒருவரை சோதனை செய்யும் போது, அவர் துப்பாக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் உடனே அவரை தனிமைப்படுத்தி கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். விசாரணையில், துப்பாக்கியுடன் பிடிபட்டவர் சிவகங்கை மாவட்ட செயலாளர் பிரபுவின் பாதுகாப்பு அதிகாரி என்பதும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் என்பதும், சிஆர்பிஎப்பில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றதும் தெரியவந்தது. இருப்பினும் கைத் துப்பாக்கிக்கான லைசென்ஸ் அவரிடம் உள்ளதா?, பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் ஏன் வந்தார்? என்பது தொடர்பாக மத்திய புலனாய்வு துறை போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அங்கிருந்த தவெக பொதுச்செயலளர் புஸ்ஸி ஆனந்திடம் கேட்டதற்கு, ‘எதே... துப்பாக்கியா...?’ என ஒன்றுமே தெரியாததுபோல் ரியாக்‌ஷன் காண்பித்தபடி நழுவினார்.

* 2 மணி நேரம் காக்க வைத்த விஜய்

கரூரில் 41 பேர் பலியான சம்பவத்துக்கு விஜய் பல மணி நேரம் தாமதமாக வந்ததே காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது. கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் பொதுவெளி கூட்டம் புதுச்சேரியில் நடந்த மக்கள் சந்திப்புதான். விஜய் 10 மணிக்கு வருவதாக கூறப்பட்டு இருந்தது. ஆனால், கூட்டம் இல்லாததால், 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த விஜய் கேரவனில் இருந்து வெளியே வரவில்லை. தவெக நிர்வாகிகள் கூட்டத்தை சேர்த்த பின் 12 மணிக்கு தான் விஜய் பேச தொடங்கினார். 41 பேர் பலியான சம்பவத்துக்கு பின்பும் 2 மணி நேரம் மக்களை விஜய் காக்க வைத்து உள்ளார். ‘இவர் இன்னும் திருந்தவே இல்லை’ என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

* மோடி, அமித்ஷா பற்றி வாய் திறக்காத விஜய்: புதுச்சேரி அரசு பற்றியும் கப்சிப்

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், ‘புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியில் இருந்தாலும், புதுச்சேரியை ஒன்றிய அரசு எதிலுமே கண்டுகொள்ளவில்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இங்கு வளர்ச்சிக்கு துணை நிற்கவே இல்லை. இந்த புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக எதுவுமே செய்யவில்லை. இங்கு ஒரு ஐடி கம்பெனி உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் முன்னேற்றமே இல்லை என்று சொல்லிக்கிட்டு இருக்கிறாங்க. புதுச்சேரி, கடலூர் மார்க்கமாக ரயில் திட்டம் என்பது நீண்டநாள் கோரிக்கை. தொழில் வளர்ச்சியும் தேவையாச்சே.தமிழ்நாட்டை ஒதுக்கிற மாதிரி புதுச்சேரியையும் ஒதுக்க கூடாது என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்’ என்றார்.

விஜய் பேசும்போது முதல்வர் ரங்கசாமியை பாராட்டினார். ஒன்றிய பாஜ அரசை பட்டும் படாமல் விமர்சித்து பேசினார். புதுச்சேரியில் பாஜ-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெறுகிறது. இந்த ஆட்சியில் ரூ.500 கோடி போலி மருந்து முறைகேடு, ரெஸ்டோ பார் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருக்கிறது. மக்களின் அடிப்படை தேவைகள் பல இடங்களில் நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஆனால், ஆளும் ரங்கசாமி-பாஜ கூட்டணி அரசை பற்றி பேசாமல், திமுகவை பற்றியே விஜய் பேசினார். விஜய் கூட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ரங்கசாமி-பாஜ கூட்டணி அரசு விதித்தது. இதற்கு டெல்லியிடம் ஒப்புதல் பெறாமல் விஜய் கூட்டத்துக்கு அனுமதி கொடுக்க முடியாது. தமிழகத்தில் கட்டுப்பாடுகளை விதித்தால் வசனம் பேசும் விஜய், புதுச்சேரியில் அதை பற்றி பேசாமல் கப்சிப் என வாயை மூடி அடங்கி போனார்.

குறிப்பாக, ஒன்றிய உள்துறையின் கீழ்தான் புதுச்சேரி வருகிறது. முழுக்க முழுக்க அமித்ஷா கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், பிரதமர் மோடியையோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையோ பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் விஜய் சென்றுள்ளார். கரூரில் 41 பேர் பலியான வழக்கில் தவெக முக்கிய நிர்வாகிகளை சிபிஐ விசாரணை நடத்தி முடித்து உள்ள நிலையில், விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விசாரணைக்கு பயந்து பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை விமர்சிக்காமல் விஜய் சென்றதாக கூறப்படுகிறது.

* 40 பேர் செத்து இருக்காங்க... எங்களுக்கு நீங்க பாடம் எடுக்காதீங்க... பாஸ் இல்லாதவர்களை உள்ளே அனுப்பிய புஸ்ஸி ஆனந்தை மிரட்டிய பெண் எஸ்.பி மைக்கை பிடுங்கி கடும் எச்சரிக்கை

தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பாஸ் இல்லாதவர்களும், தமிழகத்தை சேர்ந்தவர்களும் அதிகளவில் வந்திருந்தனர். மைதானத்துக்கு விஜய் வந்தபிறகும் போதிய கூட்டம் இல்லாததால், நுழைவாயிலில் போலீசார் வைத்திருந்த மைக்கை வாங்கி பேசிய புஸ்ஸி ஆனந்த், ‘மக்கள் எல்லோரையும் உள்ளே விடுங்க... எல்லோரும் உள்ளே வரணும்...’ என்றார். அவர் பேசி கொண்டிருக்கும் போது, அவரிடமிருந்து மைக்கை சீனியர் எஸ்பி ஈஷா சிங் ஆவேசமாக பறித்தார். இதனால் ஷாக்கான புஸ்ஸி ஆனந்த் ஏதோ கேள்வி எழுப்ப முயன்றார். உடனே அந்த பெண் எஸ்.பி, ‘உங்கள் வேலையை நீங்க பாருங்க... எங்க வேலையை நாங்கள் பார்க்கிறோம்’ என்று கூறினார். இதனால் புஸ்ஸி ஆனந்த் அமைதியாக சென்றுவிட்டார்.

பின்னர், ஒவ்வொரு நுழைவாயிலுக்கு சென்ற தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அங்கு பாஸ் இல்லாமல் நின்றிருந்தவர்களை ஒவ்வொருவராக அழைத்து உள்ளே அனுப்பி வைத்தார். இதை பார்த்து ஆத்திரமடைந்த பெண் சீனியர் எஸ்பி ஈஷா சிங், பாஸ் இல்லாதவர்களை பிடித்து வெளியே அனுப்பினார். அதற்கு புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், எஸ்.பி.,‘உங்களால் கரூரில் 40 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். யாரேனும் உயிரிழந்தால் நாங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம். இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் தான் பொறுப்பு. பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டும் உள்ளே வர வேண்டும்’ எனக்கூறி புஸ்ஸி ஆனந்தை கடுமையாக எச்சரித்தார். இதனால், என்ன செய்வது என தெரியாமல் புஸ்ஸி ஆனந்த் அந்த இடத்தைவிட்டு புறப்பட்டு சென்றார்.

* ‘விஜய் நிகழ்ச்சிக்காக அராஜகம் செய்கிறீர்கள்’

விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக உப்பளம் அம்பேத்கர் சாலையில் நேற்று மதியம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. மேலும், சோனாம்பாளையம் சந்திப்பு முதல் முதலியார்பேட்டை சந்திப்பு வரை 5 இடங்களில் தடுப்பு பேரிகார்டு மூலம் சாலைகள் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் கோலாஸ் நகர், நேதாஜி நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர். அவர்கள் மாற்று வழிகளில் சுற்றி கொண்டு சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த வாலிபர் இருசக்கர வாகனத்தில் செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் கோபமடைந்த அந்த வாலிபர், ‘இங்கு விஜய் வந்து என்ன செய்யப் போகிறார். அவர் ஒரு ஆளு... அவருக்காக சாலையை மறிக்கிறீர்கள்... நான் எப்படிதான் வீட்டிற்கு செல்ல முடியும். பக்கத்தில் உள்ள வீட்டிற்கு சுற்றிக் கொண்டு போக சொல்கிறீர்கள். இரவிலிருந்தே மிகவும் அராஜம் செய்கிறீர்கள்’ என போலீசாரிடம் கோபத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இதேபோல், இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், எல்லா வழிகளையும் அடைத்து உள்ளீர்கள். எப்படி செல்வது என கடும் வாக்குவாதம் செய்தார்.

* கார் மீது விழுந்த பேனர் 3 செவிலியர்கள் தப்பினர்

கூட்டம் முடிந்ததும் செவிலியர்கள் 3 பேர் ஒரு காரில் வெளியே வந்தனர். அப்போது மைதானத்துக்கு செல்லும் வழியில் இருபுறமும் போடப்பட்டிருந்த தகர ஷீட் வேலியில் ஒருபகுதி திடீரென சரிந்து கார் மீது விழுந்தது. அங்கிருந்த பேனரும் சரிந்தது. இதில் மயிரிழையில் அவர்கள் உயிர் தப்பினர். அதுசமயம் தொண்டர்கள், பொதுமக்கள் யாரும் அவ்வழியாக வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

* 5,000 பேருக்கு 22 கழிப்பறை

காவல்துறை அனுமதித்ததை மீறி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மைதானத்தில் 22 மொபைல் கழிப்பறைகள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன. அதுவும் தகர ஷீட் தடுப்புகளுக்கு பின்புறமாக போடப்பட்டிருந்தன. மக்களின் கண்களுக்கு தெரியாத வகையில் கழிப்பறை இடம்பெற்றிருந்ததால், அதை தேடி கண்டுபிடிக்கவே பெண்கள் அவதிப்பட்டனர்.

* ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரிதான்... பொய் சொல்லி சிக்கிய விஜய்

‘இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரிதான். ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரமே ரேஷன் கடைகள் தான். மற்ற மாநிலங்களில் இருக்கிற மாதிரி இங்கேயும் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை, எண்ணெய் என்று அனைத்தையும் வழங்குவது சீராக்கப்பட வேண்டும்’ என்று விஜய் பேசினார். ஆனால் புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜ கூட்டணி அரசு 8 வருடங்களுக்குப்பின் கடந்த 2024 அக்டோபர் 21ம் தேதி ரேஷன் கடைகளை மீண்டும் திறந்தது. மேட்டுப்பாளையத்தில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ரேஷன் கடையை திறந்து தீபாவளிக்கான அரிசி, சர்க்கரையை வழங்கினர். அதன்பிறகு ரேஷன் கடைகளில் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் இல்லாத இடங்களில் சமுதாய நலக்கூடங்கள் மூலமாக அரிசி விநியோகிக்கப்படுகிறது. ஆனால் இதைப்பற்றி தெரியாமல் விஜய், புதுச்சேரியில் ரேஷன் கடைகளே இல்லை என பொய் சொல்லி இருக்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பகிர்ந்து, ‘ஒவ்வொரு பகுதியிலும் இதேபோல்தான் பொய் பேசி வர்றாரு...இதுக்கு ஒரு எண்டே இல்லையா... எங்கெங்க என்னென்ன நடக்குதுனு தெரிஞ்சுட்டு பேச சொல்லுங்க அவர...’ என நெட்டிசன்கள் கமென்ட் அடித்து வருகின்றனர்.

* புதுச்சேரியின் நிர்வாகம் குறித்து தெரியாது: விஜய் பேசியதில் 90% உண்மை இல்லை; பாஜ அமைச்சர் பதிலடி

பாஜ மீது விஜய் கடும் குற்றச்சாட்டுகளை வைத்து உள்ள நிலையில், முதல்வர் ரங்கசாமி கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பாஜவை சேர்ந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், ‘விஜய்யை பொருத்தவரை புதுச்சேரி மாநிலத்தின் நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதை தெரியாமல் பேசியுள்ளார். அவருக்கு சொல்லி கொடுத்தவர்கள் சரியாக சொல்லிக் கொடுக்கவில்லை. தவறான கருத்துக்களை விஜய் மக்களிடத்தில் சொல்லியிருக்கிறார்.

தமிழகத்தில் அவரால் பேச முடியவில்லை, பேசவும் அவருக்கு வாய்ப்பில்லை. அதனால் புதுச்சேரி மாநிலத்தில் எதையாவது பேச வேண்டும் என்று பேசியிருக்கிறார். அவர் பேசியது கூட 12 நிமிடங்களுக்குள்தான். ஏதேனும் குறைசொல்ல வேண்டும் என்பதற்காக சில குறைகளை பேசிவிட்டு சென்றுள்ளார். அவர் பேசியதில் 90 சதவீதம் உண்மை இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* எருமைகளுடன் அலப்பறை

மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் மைதானத்தில் ஒருவர் தினமும் எருமைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று எருமை மாடுகளுடன் அம்பேத்கர் சாலையில் உள்ள துறைமுகம் மைதானம் அருகே வந்த நபர், தனது மாடுகளை உள்ளே விடும்படி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு திரண்டிருந்த பாஸ் இல்லாத தவெக தொண்டர்கள், பாஸ் இருந்தால் உள்ளே அனுமதிப்பார்கள் என்றனர். அதற்கு அவர், தனது மாடுகளும் லோக்கல் தான், பாஸ் வழங்கி உள்ளே அனுமதிக்குமாறு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த போலீசார், அவரை கோபமாக பார்த்துவிட்டு எருமை மாடுகளை அடித்து விரட்டினர்.

* ரங்கசாமிக்கு பாராட்டு பாஜவினர் கோபம்

முதல்வர் ரங்கசாமியை பாராட்டிவிட்டு, கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜவை விஜய் விமர்சித்ததால் அவர்கள் கோபமடைந்தனர். ஆட்சிக்கு இடையூறு செய்து வரும் பாஜவை, இந்த தேர்தலில் கூட்டணியில் இருந்து கழற்றிவிட ரங்கசாமி முடிவு செய்து உள்ளார். தவெகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார். இதற்காக நெருங்கிய நண்பரான புஸ்ஸி ஆனந்த் அடிக்கடி அவரிடம் பேசி வருகிறார். இதனால் தான் விஜய் பேச்சில் ரங்கசாமியை அட்டாக் செய்யாமல் பாஜவை மட்டும் பேசினார். விஜய் உரையை செல்போனில் முதல்வர் ரங்கசாமி பார்த்து ரசித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், தன்னை பாராட்டிய விஜய்க்கு ரங்கசாமி நன்றி தெரிவித்து உள்ளார்.