புதுகை அருகே நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானத்தின் கருப்பு பெட்டியை ஆய்வு செய்ய டிஜிசிஏ திட்டம்
* 15 மணி நேரத்திற்கு பின் கன்டெய்னரில் சேலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது, பொதுமக்களிடம் அதிகாரிகள் விசாரணை
புதுக்கோட்டை: சேலத்தில் ஈக்வி என்ற தனியார் விமான பயிற்சி மையத்திலிருந்து ‘செஸ்னா 172 ரக ’ பயிற்சி விமானம் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை வான்வெளி பகுதியில் நேற்றுமுன்தினம் மதியம் பறந்தபோது திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து வானில் சிறிது நேரம் வட்டமடித்த படி இருந்தது. இதில் சுதாரித்த பயிற்சி பைலட் ராகுல் ரமேஷ், இன்ஜினை ஆன் செய்தபோது மலை பகுதியில் லேசாக உரசியதால் இன்ஜின் கவர் பெயர்ந்து காட்டு பகுதிக்குள் விழுந்தது.
இதையடுத்து, பயிற்சி விமானி ராகுல் ரமேஷ், திருச்சி விமானநிலைய கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவசர அவசரமாக திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கொந்தமங்கலப்பட்டி- அம்மாசத்திரம் ஆகிய ஊருக்கு இடைபட்ட பகுதியில் நடுரோட்டில் தரையிறக்கினார். விமானத்தில் இருந்த ராகுல் ரமேஷ், 3ம் ஆண்டு மாணவர் ஹாசிர் எந்தவித காயமின்றி இறங்கினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார், குளத்தூர் வருவாய்த்துறை அதிகாரிகள், கீரனூர் தீயணைப்பு துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். திருச்சி விமான நிலைய இயக்குனர் ராஜூ தலைமையில் தொழில் நுட்ப பிரிவு, மீட்பு பிரிவுகளை சேர்ந்த 40 பேர் நேற்றுமுன்தினம் இரவு வந்து ஆய்வு செய்தனர். இதற்கிடையே சென்னை விமான போக்குவரத்து இயக்குனரக உதவி இயக்குனர் ஜான் பிரதீப் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் சம்பவ நடந்த இடத்தில் நேரில் பார்வையிட்டனர்.
பின்னர் விமானி ராகுல் ரமேஷ், மாணவர் ஹாசிர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து, விமானத்தை மீட்டு கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 1000 கிலோ எடையுள்ள அந்த விமானத்தில் 200 லிட்டர் எரிபொருள் கொள்ளளவை கொண்டதாக உள்ள நிலையில், 170 லிட்டர் எரிபொருள் விமானத்தில் இருப்பு இருந்துள்ளது. விமானத்தின் இருபுற இறக்கைகளிலும் அந்த எரிபொருட்கள் இருந்த நிலையில் அந்த எரிபொருட்களை முழுமையாக எடுத்துவிட்டு இரண்டு இறக்கைகளையும் கழட்டி விட்டு அந்த சிறிய ரக விமானத்தை கிரேன் உதவியுடன் கன்டெய்னரில் ஏற்றி கொண்டு சேலத்திற்கு செல்ல அதிகாரிகள் திட்டமிட்டனர்.
அதன்படி, திருச்சியில் இருந்து கிரேனும், கன்டெய்னர் லாரியும் சம்பவ இடத்திற்கு வந்தது. பத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் நீண்ட நேரம் போராடி சிறிய ரக பயிற்சி விமானத்தின் இரண்டு இறக்கையில் உள்ள எரிபொருட்களை பேரலில் சேகரித்துவிட்டு, இரண்டு இறக்கைகளையும் பத்திரமாக கழட்டினர். பின்னர் கிரேன் உதவியுடன் விமானத்தை கன்டெய்னரில் ஏற்றி அதன் பிறகு இறக்கைகளையும் கண்டெய்னரில் ஏற்றி, சுமார் 15 மணி நேரத்துக்கு பின் பாதுகாப்பாக சேலத்தில் உள்ள ஈக்வி விமான பயிற்சி மையத்திற்கு எடுத்து சென்றனர்.
நேற்று காலை சம்பவ இடத்திற்கு மீண்டும் வந்த சென்னை விமான போக்குவரத்து இயக்குனரக உதவி இயக்குனர் ஜான் பிரதீப், குளத்தூர் தாசில்தார் சோனை கருப்பையா ஆகியோர் அம்மாசத்திரம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து பயிற்சி விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியை எடுத்து ஆய்வு செய்ய டிஜிசிஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அந்த பெட்டியில் உள்ள தகவல்களை ஆய்வு செய்தால் விமானி என்ன பேசினார், திருச்சி ஏர்போர்ட் கட்டுப்பாட்டு அறைக்கு என்ன தகவல் கொடுத்தார். அதற்கு அவர்கள் என்ன பதில் தெரிவித்தார்கள், இந்த சம்பவத்திற்கான முழுமையான காரணம் பின்னர் தெரியவரும் என்று விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.