புதுச்சேரியில் தொடங்கியது ‘ஆபரேஷன் தாமரை’ ரூ.500 கோடி ரங்கசாமிக்கு ‘செக்’ டெல்லி போடும் கூட்டணி கணக்கு: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஆரம்பம்
புதுச்சேரி: புதுச்சேரியில் இம்முறை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை விட அதிக இடத்தில் போட்டியிட வேண்டும் என்று பாஜ திட்டமிட்டு ஆளுநர், சிபிஐயை களமிறக்கி உள்ளது. இதற்காக முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், ரூ.500 கோடி போலி மருந்து மோசடி விவகாரத்தை கையிலெடுத்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது பாஜ மேலிடம். மேலும், பாஜவை வலுப்படுத்தும் வகையில், மாற்று கட்சியில் உள்ள மாஜிக்களை இழுக்கும் பணியை தொடங்கி உள்ளது.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2026 பொதுத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கடந்த கால தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முதல்வர் ரங்கசாமி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் கவர்னர், தலைமை செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளால் போடப்படும் சில முட்டுக்கட்டைகளால் முழுமையாக திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்ற விரக்தியில் முதல்வர் ரங்கசாமி இருப்பதாக என்ஆர் காங்கிரஸ் வட்டாரத்தில் தகவல் பரவியது. இதன் காரணமாக கூட்டணி மாற்றமும் இருக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டது.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரங்கசாமி, கூட்டணி தொடர்பான கேள்விக்கு எந்தவித பதிலும் கூறாமல் தேர்தல் நேரத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என அறிவித்தபடி நழுவிச் சென்றார். இதனால் பாஜவுடன் கூட்டணியை என்ஆர் காங்கிரஸ் கைகழுவுகிறது என்ற தகவல் பரவியது. அதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து பாஜ தேசிய தலைமை, முதல்வர் ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி சமாதானப்படுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த முறையை விட இம்முறை என்.ஆர்.காங்கிரஸை விட பாஜ அதிக தொகுதியில் போட்டியிட்டு முதல்வர் சீட்டை பிடிக்க வேண்டும் என்று டெல்லி திட்டமிடுகிறது. இதற்காக ரங்கசாமியை தங்கள் வழிக்கு கொண்டு வர ஆளுநர், சிபிஐ மூலம் புதுச்சேரியில் அனுமதியின்றி மருந்து விற்பனை செய்து ரூ.500 கோடி மோசடி நடந்த விவகாரத்தை பாஜ கையிலெடுத்து நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி, சிபிஐ அதிகாரிகள் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினர். இந்த விவகாரத்தில் ஆளுநர் மூலம் நெருக்கடி கொடுத்து, கூட்டணியில் இருந்து வெளியேறாமல் ரங்கசாமியை தடுக்க பாஜ முடிவு செய்து உள்ளது. அதே நேரத்தில், பாஜவை பலப்படுத்தும் வேலையிலும் டெல்லி தலைமை ஈடுபட்டுள்ளது. இதற்காக முக்கிய தொகுதிகளை சேர்ந்த மாற்றுக்கட்சி மாஜிக்களை இழுக்கும் நடவடிக்கையிலும் (ஆபரேஷன் தாமரை) பாஜ முழுவீச்சில் இறங்கி உள்ளது.
இந்த சூழலில், புதுச்சேரி திலாசுபேட்டையில் உள்ள முதல்வரின் வீட்டிற்கு நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் பாஜ தேசிய மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில பாஜ தலைவர் ராமலிங்கம் ஆகியோர் திடீரென வந்தனர். அங்கு முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஒரு மணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது சட்டமன்ற தேர்தல் கூட்டணி விவகாரம் மட்டுமின்றி அரசு நிர்வாக ரீதியிலான சில பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாதது குறித்தும் சுரானாவிடம் முதல்வர் ரங்கசாமி எடுத்து கூறியதாக தெரிகிறது.
மேலும், கடந்த சட்டமன்ற தேர்தல் போன்று 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரசும், 14 தொகுதியில் பாஜ கூட்டணியும் போட்டியிட முடிவு செய்து கொள்ளலாம். பாஜ கூட்டணியில் அதிமுக இருப்பதால் 14 தொகுதியில் இருந்து அவர்களுக்கு சீட் ஒதுக்கி கொள்கிறோம் என பாஜ மேலிட நிர்வாகிகள் ரங்கசாமியிடம் கூறினர். தொகுதி பிரிப்பது இருக்கட்டும். புதுச்சேரி அரசின் சில தேவைகள் ஒன்றிய அரசால் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது.
புதுவை அரசின் மீதான விமர்சனங்களை கூட்டணி கட்சி பாஜ எம்எல்ஏக்களே தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர் என முதல்வர், அவர்களிடம் கேள்வி எழுப்பினாராம். மேலும், பாஜவின் பி டீமாக செயல்படும் லாட்டரி அதிபர் சார்லஸ் மார்ட்டின் தலைமையிலான போட்டி குழுவின் செயல்பாடுகள் குறித்த அதிருப்தியையும் சுரானாவிடம், ரங்கசாமி முன்வைத்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது உடனிருந்த என்ஆர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயபாலிடம் கேட்டபோது, அரசு நிர்வாக ரீதியிலான பேச்சுவார்த்தைதான், மற்றபடி பெரிதாக ஒன்றுமில்லை என்றார்.