Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை.! முடிவை நிறுத்தி வைக்க பெ.சண்முகம் வலியுறுத்தல்

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தவெக அரசை, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் தவெக அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் ஏற்கனவே கரூர் வருகை தந்திருந்தபோது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சோக சம்பவம் நடந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்போவதாகத் தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.

தவெக பிரச்சாரத்தின் போது இறந்தவர்கள் என்பதால், தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்கிற நியாயமான கேள்வி முன் வருகிறது. மேலும், 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இப்படியான அறிவிப்புகள் வெளியாவது, வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்.

சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது என்பது வேறு, அரசு வேலை வழங்குவது என்பது முற்றிலும் வேறானது. எனவே, பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக முறையான ஒரு பொது வழிகாட்டுதலை (Guidelines) அரசு உருவாக்க வேண்டும். அதுவரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.