பெஞ்சல் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்
* அதிகாரிகளுக்கு முதன்மை செயலாளர்கள் உத்தரவு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை செய்துகொடுக்க அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூடுதல்தலைமை செயலாளர்கள் உத்தரவிட்டனர்.விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பெஞ்சல் புயலினால் ஏற்பட்ட பாதிப்பு மீட்பு பணி நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுகூட்டம் ஆட்சியர் பழனி தலைமையில் நடந்தது.
வருவாய், பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் அமுதா, போக்குவரத்து முதன்மை செயலாளர் சுன்சோங்கம்ஜடக் ஆகியோர் மீட்புபணிகள் தொடர்பாக கலந்தாலோசித்து உரிய அறிவுரைகளை வழங்கினர். இக்கூட்டத்தில் அவர்கள் பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலினால் பல்வேறு பகுதிகளில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு மற்றும் நிவாரணபொருட்கள் வழங்கப்பட்டு வருவது குறித்தும், மின்கம்பங்கள் சீரமைப்பு, தேசியநெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் சாலைகள் சீரமைப்பு, மரங்கள் அகற்றம், மழைநீர்வெளியேற்றம் உள்ளிட்ட பணிகள் குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும், தண்ணீரால் உண்டாகும் நோய்த்தொற்று ஏற்படாத வகையில் மருத்துவமுகாம் நடத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவது குறித்தும் விரிவாக கேட்டறியப்பட்டது.
மேலும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில், பயிர்சேதம் குறித்து கணக்கீடு முறையாக மேற்கொண்டு நிவாரண வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடைகள் இழப்பு குறித்து கணக்கீடு செய்து நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்ைககள் மேற்கொள்ள வேண்டும். மீன்வளத்துறை சார்பில் மீனவர்களின் படகுகள், மீன்பிடிவலைகள் மற்றும் மீன்குஞ்சுகள் வளர்ப்பு பாதிப்புகளை கணக்கீடு செய்வது குறித்தும், ஊரகவளர்ச்சி மற்றும் வருருவாய்த்துறை சார்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடு பாதிப்புகள் குறித்த கணக்கீடு மேற்கொண்டு நிவாரணம் வழங்கும் பணிகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.
ஊரகவளர்ச்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூய்மைபணியாளர்கள் மூலம் அனைத்து சாலைப்பகுதிகளையும் சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் தெளித்திட வேண்டும். அனைத்து பொதுமக்களும் தங்களுடைய வீட்டில் தூய்மையாக வைத்துகொள்வதற்கான உட்புறம், வீட்டின் வெளிப்புற பகுதி, நீர் சேமிப்புத்தொட்டி போன்றவற்றினை சுத்தம் செய்து சுகாதாரமாக வைத்துகொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேல்நிலைநீர்தேக்கதொட்டிகளை சுத்தம் செய்து குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர். இதில் தமிழ்நாடு மின்பகிர்மான கழக தலைவர் நந்தகுமார், ஊரக வளர்ச்சி இயக்குநர் பொன்னையா, சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்இயக்குநர் ஆல்பிஜான்வர்கீஸ், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையா, எஸ்பி தீபக்சிவாச், ஊரக வளர்ச்சிமுகமை கூடுதல் ஆட்சியர் ஸ்ருதஞ்ஜெய்நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெள்ளம் வடிந்த பகுதியில் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்
முதன்மை செயலாளர்கள் பேசுகையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்வது குறித்தும், வருவாய்த்துறை சார்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்கள் வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த நிவாரண உதவித்தொகை வழங்கிடுவதற்கான கணக்கீடு பணிகளை மேற்கொண்டு டோக்கன் வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகவளர்ச்சித்துறை சார்பில் தூய்மைபணியாளர்கள் மூலம் மழைவெள்ளம் வடிந்த மற்றும் மழைநீர் வெளியேற்றப்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று ஏற்படாத வகையில் முறையான சுகாதார வசதிகள் மேற்கொள்ளவேண்டும் என்றனர்.


