புதுடெல்லி: போராட்டங்களை கையாளும் போது போலீசார் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ”நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்ட ஏற்பாட்டாளர்கள் ஆத்திரமூட்டும் வகையிலான பொது அறிக்கைகளை வெளியிட்டனர். அதன் விளைவாக ஏற்பட்ட வன்முறைக்கு அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
மேலும் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிஸ்வான் அகமது,\” நாடாளுமன்ற முற்றுகை பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில், தடையை மீறி பேரணி நடைபெற்றது.
இதில் ஏற்பட்ட மோதல்களை தடுக்கவும் மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்களை கலைக்கவே காவல்துறையினர் தடியடியை நடத்தி இருந்தார்கள். காவல்துறை விதித்த தடையை மீறி, நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லப் போராட்டக்காரர்களை அனுமதிப்பது ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துவிடும். நாடாளுமன்றத்தை முற்றுகை இடுவது என்பது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. ஒருவேளை இந்த முற்றுகை போராட்டம் ஒரு கலவரமாக மாறி துப்பாக்கி சூடு நடந்திருந்தால் யார் பொறுப்பேற்பது.
குறிப்பாக ஜூலை 20ம் தேதி அன்று நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக அரசு மற்றும் காவல்துறையினரிடம் பொறுப்பு குறித்து கேட்கப்பட்ட நிலையில், போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்பவர்கள், அதில் ஏற்படும் குறைபாடுகளுக்கு பொறுப்பேற்க வைக்கப்படுவதுபோல், இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட அனைத்து குறைபாடுகள் மற்றும் சம்பவங்களுக்கு ஏற்பாட்டாளர்களையே பொறுப்பேற்க வைக்க வேண்டும், கல் எறிதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனையாக சமூக சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதில்,\”ஒரு போராட்ட களத்தில் நிலவரம் வன்முறையாக மாறுவதற்கு முன்பு, அந்த இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடாதவாறு நாம் கவனமாகச் செயல்பட வேண்டும். அவர்களுக்கு அறிவுரை கூறி, அமைதிப்படுத்துவதோடு, பிறரின் கருத்துகளை கேட்க வைக்கும் விதமாக நடக்க வைப்பது என்பது சிறந்ததாகும். அந்தவகையில், போராடும் இளைஞர்கள் சொல்வதை கேட்டு, அவர்கள் எதற்காக முழக்கமிடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், போராட்டங்களை கையாளும் போது காவல்துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், சூழ்நிலை கட்டுப்பாட்டை மீறிச் செல்லாதவாறு பார்த்துக் கொள்வதோடு, அமைதியான போராட்டங்களுக்கு வழிவகுப்பதே முன்னுரிமையாக இருக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் எங்கு நிகழ்ந்தாலும், அவற்றை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள்\” இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்ததோடு, இதே கோரிக்கை கொண்ட வழக்கோடு இந்த மனுவையும் இணைத்து விசாரணையை ஒத்திவைத்தனர்.
* ஒரு போராட்ட களத்தில் நிலவரம் வன்முறையாக மாறுவதற்கு முன்பு போலீசார் கவனமாகச் செயல்பட வேண்டும்.
* போராடும் இளைஞர்கள் சொல்வதை கேட்டு, அவர்கள் எதற்காக முழக்கமிடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
* சூழ்நிலை கட்டுப்பாட்டை மீறிச் செல்லாதவாறு பார்த்துக் கொள்வது அவசியம்.
* அமைதியான போராட்டங்களுக்கு வழிவகுப்பதே முன்னுரிமையாக இருக்க வேண்டும்.


