தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்று நிலுவை வைத்துள்ள விவசாயிகளின் உத்தேச கடன் தொகையான ரூ.5,932.23 கோடியை தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதில், பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 75 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீத கடன்தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது.
மேலும், 75 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக கடன் பெற்ற விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 35 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்பட உள்ளது. இதன்மூலம், கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்சம் ரூ.35 ஆயிரம், அதிகபட்சம் ரூ.75 ஆயிரம் வரை பணப்பயன் கிடைக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
1.5.2025-க்கு முன்னர் பெற்ற கடன்களுக்கும், 28.2.2026 அன்றைய நிலுவைக்கு பின் அரசாணை வெளியிடுவதற்குள் முழுமையாக திருப்பி செலுத்தப்பட்ட கடன்களுக்கும் இத்திட்டம் பொருந்தாது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்கடன் தள்ளுபடி என்பது வெறும் ஏமாற்று வேலையாகவே உள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சியில், தமிழக அரசு தள்ளுபடி செய்த பயிர்கடன் தொகை ரூ.12,110 கோடி. ஆனால், தற்போது தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ள பயிர்கடன் தொகை வெறும் ரூ.5,932.23 கோடி மட்டுமே. இது, யானை பசிக்கு சோளப்பொறி போன்று உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் ஒற்றை கோரிக்கை. இதை முன்வைத்து விவசாயிகள் தமிழ்நாடு முழுவதும் உணர்வுப்பூர்வமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால், இதை கொச்சைப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் விஜய், எதிர்கட்சிகளின் தூண்டுதலின்பேரில்தான் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர் என விமர்சனம் செய்துள்ளார். முதல்வரின் பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பும், கொச்சைத்தனமான பேச்சும் எங்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்குகிறது என விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஒருபுறம் பயிர்கடன் தள்ளுபடியில் அநீதி இழைக்கப்படும் நிலையில், மற்றொருபுறம் டெல்டா விவசாயம் பாலைவனமாக மாறிவிடும் அபாயம் எழுந்துள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகா அரசு, காவிரி நீரை ஒட்டுமொத்தமாக தடுக்கும் வகையில் மேகதாது அணை கட்டியே தீருவோம் என ஒற்றைக்காலில் நிற்கிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசின் எதிர்ப்பு என்பது ஆமை வேகத்தில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது.
சட்டப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில், வெறும் சட்டமன்ற தீர்மானம் எந்த வகையிலும் பலன் அளிக்காது. மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதில் முந்தைய திமுக அரசு உறுதியாக இருந்தது. ஆனால், தற்போதைய தவெக அரசு தடுமாறுகிறது. புதிய நடுவர் மன்றத்தை நாடுவது, கண்டன தீர்மானம் நிறைவேற்றுவது என்பது எந்த வகையிலும் பலன் தராது.
எனவே, முந்தைய திமுக அரசுபோல் தற்போதைய தவெக அரசும் உறுதியாக இருக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். பயிர்கடன் தள்ளுபடி, மேகதாது உள்ளிட்ட விவகாரத்தால் தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளதால் விவசாயிகளின் விளைநிலங்கள் போராட்ட களமாக மாற தொடங்கி உள்ளது.
