Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர் பணியிடங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட கோரி ஆர்ப்பாட்டம்

ஊட்டி : நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் ஏற்கனவே பணியாற்றி வரும் மருத்துவர்கள் பணியிடங்களை குறைத்து, புதியதாக துவக்கப்படும் மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் நியமிக்கப்படுவதாக கூறப்படுகிறது. முதுநிலை படிக்க செல்லும் மருத்துவர்கள் பணியிடங்களை மீண்டும் நிரப்பப்படுவதில்லை. இதனால், மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நடைமுறையை கண்டித்து ஊட்டியில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் டாக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் டாக்டர் தன்ராஜ், நிர்வாகிகள் டாக்டர் நளினி, நித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது:தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் நான்கு பழைய மருத்துவ கல்லூரிகளில் இருந்து ஜூனியர் ரெசிடெண்ட் பதவியில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களை ஆட்குறைப்பு செய்து புதியதாக திறக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு பணி நிரவல் செய்து சமீபத்தில் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. புதியதாக துவக்கப்படும் மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை.

பழைய மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள், பணியாளர்கள் இங்கு பணி செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதேபோன்று, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையிலும், பெரியார் நகர் மருத்துவமனையிலும் எந்த ஒரு பணியிடங்களும் உருவாக்கப்படாமல் பிற மருத்துவமனைகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டு இங்கு மருத்துவர்களும், செவிலியர்களும், பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். தொடர்ச்சியாக இதே போன்று எந்த ஒரு புதிய பணியிடங்களும் உருவாக்கப்படாமல் புதிய மருத்துவமனைகள் துவக்கப்படுவதை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.

தற்போது ஆட்குறைப்பு செய்யப்பட்டிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசு தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி ஆட்குறைப்பு செய்வதாக கூறுகிறது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி பார்க்க வேண்டிய வெளி நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சைகள், பிரசவங்கள் ஆகிய குறியீடுகளில் அந்த விதிகளை விட சுமார் மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகமாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மருத்துவர்கள் குறைவாகவே உள்ளனர். 24 ஆயிரம் மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் சுமார் 12000 மருத்துவர்கள் மட்டுமே தற்போது மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி வருகிறார்கள்.

குறைவான எண்ணிக்கையில் மருத்துவர்களை வைத்து அரசு மருத்துவ கல்லூரிகள் நடத்தி வரும் நிலையில் மருத்துவர்கள் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்வது தவறான செயலாகும். இதனால், மருத்துவர்கள் மட்டுமல்ல, நோயாளிகளும் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். இனி மேல் புதியதாக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டால் அதற்குரிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்ட பின்னரே அந்த மருத்துவமனைகள் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.