Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கடுமையான நிதி பற்றாக்குறை காரணமாக ரூ.3,189.65 கோடி மதிப்பிலான திட்ட பணிகள் நிறுத்தி வைப்பு: சேகர்பாபு கேள்விக்கு அமைச்சர் ராஜ்குமார் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், வடசென்னை பாரதி மகளிர் கல்லூரிக்கு ஒரு கலையரங்கத்தை கடந்த ஜனவரி மாதம் ரூ.20 கோடியில் 700 பேர் அமரும் வகையில் கட்டுமான பணியை தொடங்கி இருந்தோம். அந்த பணிகள் தற்போது தாமதப்படுத்தப்பட்டுள்ளது. கேட்டால் நிதிச்சுமை என்பீர்கள். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை உடனடியாக மேற்கொண்டு கலையரங்கத்தை உருவாக்கி தர வேண்டும். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார்: பாரதி பெண்கள் கலை கல்லூரியில் ரூ.27.60 கோடி மதிப்பீட்டில் பன்னோக்கு அரங்கம் அமைக்கும் பணிகள் 22 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன.

ஆனால் நிதிப் பற்றாக்குறை காரணமாக கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2021-22ம் நிதியாண்டின் தொடக்கத்தில் சிஎம்டிஏவிடம் ரூ.2,658.55 கோடி திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு நிதி இருந்தது. அதைத் தொடர்ந்து வந்த 4 ஆண்டுகளில், குறிப்பாக 2023-24ம் ஆண்டிலிருந்து பிற அரசு துறைகளுக்கான ஏராளமான நகர்ப்புற மற்றும் சமூக உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பது மற்றும் அந்த திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பை சிஎம்டிஏ ஏற்றுக்கொண்டது. இதன்படி மொத்தம் ரூ.3,755.53 கோடி ஒப்புதல் மதிப்பில் 201 உட்கட்டமைப்பு திட்டங்களை சிஎம்டிஏ மேற்கொண்டுள்ளது. அவற்றில் ரூ.1,055.56 கோடி அளவுக்கு நிலுவை கட்டுமான பணிகளுக்கான நிதிப் பொறுப்பு இருக்கிறது.

இது தவிர, வடசென்னை வளர்ச்சித் திட்டம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் வெளிவட்ட சாலை தொடர்பான நிதி பொறுப்புகள் மட்டும் ரூ.3,189.65 கோடியாக உள்ளன. இதன் மூலம் சிஎம்டிஏ தற்போது எதிர்கொள்ளும் மொத்த நிதி பொறுப்பு சுமார் ரூ.4,245.21 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், சிஎம்டிஏவிடம் தற்போது திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு நிதியாக ரூ.109 கோடி மட்டுமே மீதமுள்ளது. நடைபெற்று வரும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தவும், ஏற்கனவே ஏற்றுக்கொண்ட நிதி பொறுப்புகளை சமாளிக்கவும் ஆண்டுக்கு 8 சதவீத வட்டி மற்றும் கூடுதலாக 2.5 சதவீத அபராத வட்டியுடன் ரூ.200 கோடி வழிவகை முன்பணம் பெறப்பட்டது.

கடந்த மார்ச் 26ம் தேதி பெறப்பட்ட அந்த ரூ.200 கோடி முழுவதும் கட்டுமான பணிகளுக்காக செலவிடப்பட்டுவிட்டது. இதனால் பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிதிநிலை சீராகும்பட்சத்தில் பாரதி பெண்கள் கலை கல்லூரி பன்னோக்கு அரங்கத்தின் கட்டுமான பணிகள் மீண்டும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.