Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லாபகரமான மக்காச்சோள சாகுபடி!

தானியப் பயிர்களில் அதிக சத்துக்கள் நிறைந்த பயிர் என்ற பெருமை கொண்டது மக்காசோளம். தானியங்களின் ராணி என வர்ணிக்கப்படும் மக்காச்சோளம் தமிழகத்தில் நெல்லுக்கு அடுத்ததாக அதிகளவில் பயிரிடப்படும் உணவுப்பயிராகவும் விளங்குகிறது. இது இறைவை மற்றும் மானாவரி பரப்பிலும், நீர்வளம், மண் வளம் குறைந்த இடங்களிலும் செழித்து வளரக்கூடியது. மக்காச்சோளம் தானியமாக மட்டுமல்லாமல் சிறந்த கால்நடைத் தீவனமாகவும் பயன்படுவதால் சந்தையில் இதற்கு அதிக வரவேற்பு இருக்கிறது. மேலும் எத்தனால் உற்பத்தியில் மக்காச்சோளம் முக்கியப்பங்கு வகிக்கிறது. இத்தகைய மக்காசோளத்தை விவசாயிகள் பயிரிட்டு நல்ல லாபம் பெறலாம் என தெரிவிக்கும் கோயம்புத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்ச்செல்வி, மக்காச்சோளத்தை லாபகரமான முறையில் பயிரிட்டு பராமரிக்கும் முறை குறித்தும் பகிர்ந்துகொள்கிறார்.

சாகுபடி பருவம்

மக்காச்சோளச் சாகுபடிக்கு பொதுவாக வீரியம் மற்றும் ஒட்டு ரகங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இந்த ரகங்கள் மானாவரியில் ஆடிப்பட்டம், புரட்டாசிப் பட்டம், தைப்பட்டம் ஆகிய பட்டங்களில் பயிரிடப்படுகின்றன. இறைவையில் ஆடிப்பட்டம் மற்றும் புரட்டாசிப் பட்டங்களில் பயிர் செய்யப்படுகின்றன.

விதை அளவு

விதைப்புக்கு வீரியரக விதைகள் ஒரு எக்டருக்கு 20 கிலோவும், ஒட்டுரக விதைகள் 25 கிலோவும் தேவைப்படும். விதைகளை 4 செ.மீ ஆழத்தில் நடுவது சிறந்த பலன் அளிக்கும்.

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதையுடன் சையாண்டரினிலிபுரோல் 19.8 + தியோமெந்தாக்சம் 19.8-4 மிலி மருந்து கலந்து விதைக்கலாம். அல்லது விதைப்பதற்கு சற்று முன்பு அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டிரியா உடன் கலந்து விதைக்க வேண்டும்.

பயிர் இடைவெளி

விதைப்புக்கு வரிசைக்கு வரிசை 45 செ.மீட்டர் இடைவெளியும், செடிக்கு செடி 20 செ.மீட்டர் இடைவெளியும் விட வேண்டும்.

உர அளவு

ஒரு எக்டருக்கு தொழுஉரம் 12.5 டன்னுடன் 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை கடைசி உழவில் இடலாம். மேலும் தழைச்சத்து 135 கிலோ, மணிச்சத்து 62.5 கிலோ சாம்பல் சத்து 50 கிலோ இட வேண்டும். நுண்ணூட்டச் சத்து குறைபாட்டைத் தடுக்க தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை வழங்கும் நுண்ணூட்டக் கலவை 12.5 கிலோவை 40 கிலோ மண்ணுடன் கலந்து இட வேண்டும்.

களை நிர்வாகம்

மக்காச்சோளத்தை விதைத்த 15, 30வது நாட்களில் களையெடுக்கும் சமயத்தில் பயிருக்குப் பயிர் 20 செ.மீட்டர் இடைவெளி இருப்பது போல் களை எடுக்க வேண்டும். அல்லது களைக்கொல்லி மூலம் கட்டுப்படுத்த விதைத்த 3ம் நாள் மற்றும் 25-30 நாட்களில் அட்ரசின் 250 கிராமை 500 லிட்டர் நீரில் கலந்து மண்ணில் ஈரப்பதம் இருக்கும்போது தெளிக்க வேண்டும். ஊடுபயிராக பயறு வகை பயிர்களை சாகுபடி செய்திருந்தால் அட்ரசின் பயன்படுத்தக்கூடாது.

நீர் நிர்வாகம்

மக்காச்சோளம் பயிருக்கு நீர் தேங்கக்கூடாது. முளைக்கும்போதும், பூக்கும்போதும், வளர்ச்சிப் பருவத்திலும் தேவைக்கு ஏற்ப நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். அல்லது சொட்டுநீர்ப் பாசனம் செய்யலாம்.

ஒருங்கிணைந்த பயிர் நோய் மற்றும் பூச்சி பாதுகாப்பு முறை

குருத்து ஈ, அசுவணி பூச்சி களைக் கட்டுப்படுத்த 5 சதவீதம் வேப்பங்கொட்டைச் சாறு தெளிக்க வேண்டும். அமெரிக்கப் படைப்புழு தாக்குதலில் இருந்து பாதுகாக்க 15-20 நாளில் நவல்யூரன், 40-20 நாளில் ஸ்பைனிடோம் 11.7, 60 நாளில் பிளுபெண்டமைட் மருந்துகளைத் தெளிக்கலாம். வரப்புப் பயிராக தட்டை, துவரை பயிர்களைப் பயிரிடலாம். விளக்குப்பொறிகளை ஏக்கருக்கு 12 என்ற அளவில் நிறுவலாம். அடிச்சாம்பல் நோயைக் கட்டுப் படுத்த ஒரு ஏக்கருக்கு 500 கிராம் மெட்டாலாக்சில் அல்லது 1 கிலோ மேன்கோசெப்பை 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். தேன் ஒழுகல் நோயினைக் கட்டுப்படுத்த மெட்டாலாக்சில் அல்லது கார்பெண்டசிமை பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். துரு நோயைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு நனையும் கந்தகம் 2.5 கிலோ அல்லது மேன்கோசெப் 1 கிலோ தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் 10 தினங்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.

அறுவடை

இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தைத் தரும். தானியங்கள் கடினமாகும். அப்போது கதிர்களைத் தனியாக அறுவடை செய்ய வேண்டும்.

மகசூல்

இந்த முறையில் பயிரிட்டால் மானாவாரியாக 4.5 டன் வரையும், இறைவையாக 7-7.5 டன் வரையும் மகசூல் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

மக்காச்சோளத்தைப் பொருத்தவரை பெரும்பாலான விவசாயிகள் வீரிய ஒட்டு ரக விதைகளையே விதைப்புக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த ரகங்களில் நல்ல மகசூல் கிடைப்பதுடன், அதிக தட்டைகளும் கிடைக்கின்றன. தட்டைகள் கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாக விளங்குகின்றன.

மக்காச்சோளம் சாகுபடி குறித்த கூடுதல் தகவல்களுக்கு விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம். மேலும் உழவர் செயலியையும் பயன்படுத்தி தகவல்களை அறிந்துகொள்ளலாம்.