நெல், வேர்க்கடலையில் நேர்த்தியான லாபம்... ஆர்கானிக் விவசாயத்தில் சாதிக்கும் பசுபதி!
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள பாலூர் கிராமத்தில் ஒரு காலத்தில் ஊர் முழுக்க விவசாயம் செழித்தோங்கியது. இப்போது அங்கு பத்தில் ஒரு பங்கு நிலத்தில் மட்டும்தான் வெள்ளாமை நடந்து வருகிறது. அதில் எப்போதும் பச்சைப் பசேலென காட்சி தரும் நிலமாக விளங்குகிறது பசுபதியின் விவசாய நிலம். சொந்தமாக எட்டு ஏக்கர், குத்தகைக்கு ஐந்து ஏக்கர் என மொத்தம் பதிமூன்று ஏக்கரில் நெல் மற்றும் வேர்க்கடலை சாகுபடி செய்து வரும் பசுபதியின் விவசாய நுணுக்கங்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவை. பசுபதியைப் பற்றியும் அவரது விவசாய முறையைப் பற்றியும் தெரிந்துகொள்ள ஒரு காலைப்பொழுதில் அவரது வயலுக்குச் சென்றோம்.
``நெல், வேர்க்கடலைதான் எங்களுக்கு பிரதானப்பயிர். தாத்தா காலத்தில் இருந்தே இந்த இரண்டையும் சாகுபடி செய்து வருகிறோம். நான் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்து முடித்திருந்தாலும், விவசாயம் மீதுள்ள ஈர்ப்பினால் வேறு வேலைக்குச் செல்லாமல் விவசாயமே செய்து வருகிறேன்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார். 30 வருடங்களாக தனியாக விவசாயம் பார்த்து வரும் நான் கடந்த 15 வருடங்களாக முழுக்க முழுக்க இயற்கை முறை விவசாயத்தை செய்து வருகிறேன். இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என யோசித்து, அதில் இறங்கியபோது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. பல வருடங்கள் ரசாயன விவசாயத்திற்கு பழக்கப்பட்ட நிலம் என்பதால், இயற்கை விவசாயத்திற்கு பழக்க ஏகப்பட்ட சிரமங்கள். முதல் 5 வருடங்கள் அறுவடை பாதியாக குறைந்தாலும் கூட, நான் இயற்கை விவசாயத்தை கைவிடவில்லை. எப்படியாவது மண்ணை இயற்கை வழி சாகுபடிக்கு பழக்கப்படுத்த வேண்டும் என்பதில் மட்டும் தீவிரமாக இருந்தேன். அதன்படி, தற்போது எனது நிலத்தை முழுமையாக இயற்கை விவசாயத்திற்கு மாற்றிவிட்டேன்.
மொத்தம் பதிமூன்று ஏக்கரில், 9 ஏக்கர் நிலக்கடலை விதைத்து அறுவடை எடுத்தேன். மீதமுள்ள 4 ஏக்கரில் நெல் சாகுபடி. நெல் விதைப்புக்கு முன்பாகவே, நிலத்தை மூன்று முறை நன்கு உழுவேன். கடைசி உழவின்போது ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் போட்டு உழுவேன். அதுபோக, ஏக்கருக்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு போன்றவற்றையும் சேர்த்து உழுவேன். இப்படி கொடுப்பதன் மூலம், சாகுபடிக்குத் தேவையான அடிச்சத்து தழைச்சத்து கிடைத்துவிடும். அதன்பின், நிலத்தில் நெல் விதைப்பை தொடங்குவேன். நெல் விதைத்து சரியாக 15வது நாளில் களை எடுத்துவிட்டு மீன் அமிலம் கொடுப்பேன். இந்த சமயத்தில் மீன் அமிலம் கொடுப்பதால், பயிரில் பூச்சித் தாக்குதல் குறைந்து, பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். அடுத்த பதினைந்தாவது நாளில் பஞ்சகவ்யம் குடுப்பேன். இதற்கிடையில், நெல் விதைத்ததில் இருந்து ஒவ்வொரு இருபது நாளுக்கும், ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற முறையில் ஜீவாமிர்தத்தை நீரோடு கலந்து விடுகிறேன். இப்படி, பயிருக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் இயற்கை முறையில் கொடுப்பதால், எனது நிலத்தில் விளையும் பயிர்கள் நன்கு முதிர்ச்சி அடைந்து எடையும் அதிகமாகும்.
இப்படி, இயற்கை முறையில் விவசாயம் செய்யப்படும் பயிர்களில் இருந்து ஏக்கருக்கு 2.5 டன் வரை நெல் சாகுபடி செய்கிறேன். 4 ஏக்கரில் கிடைக்கும் 10 டன் நெல்லை பாதியாக பிரித்து, 5 டன் விதைப் பண்ணைக்கும், 5 டன் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கும் கொடுக்கிறேன். விதைப் பண்ணைக்கு கொடுக்கப்படும் நெல்லை ஒரு கிலோ ரூ.34க்கும், மற்ற வகையில் ரூ.25க்கும் விற்பனை செய்கிறேன். இதன்மூலம், 10 டன் நெல்லை 2 லட்சத்து 90 ஆயிரத்திற்கு விற்பனை செய்கிறேன். இந்த நெல் மற்றும் விலை விவரம் எல்லாம் கடைசி முறை அறுவடையின் கணக்குதான். இந்த சாகுபடியையும் வருமானத்தையும் இயற்கை விவசாயத்தில் பெறுவதற்கு எனக்கு 15 ஆண்டுகளானது. ரசாயன முறையில் சாகுபடி செய்ய மருந்து, உரம், அதைத் தெளிக்க ஆள்கூலி என செலவுகள் அதிகமாகும். ஆனால் இந்த இயற்கை சாகுபடிக்கு செலவோ, ஆட்களோ தேவையில்லை. நானே அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொள்கிறேன். செலவெனப் பார்த்தால் எனக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவாகிறது. 4 ஏக்கருக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் செலவானாலும் கூட, மீதமுள்ள பணம் எனக்கு லாபம்தான்’’ என மகிழ்ச்சியோடு பேசி முடித்தார் பசுபதி.
தொடர்புக்கு:
பசுபதி: 97910 91427.
4 ஏக்கரில் இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்யும் பசுபதி, நெல் விதைப்புக்கு முன்பு நிலத்தில் வேர்க்கடலை செடிகளைப் போட்டு, அதையும் சேர்த்து உழுகிறார். வேர்க்கடலை செடியின் வேர் முடிச்சுகளில் நைட்ரஜன் இருப்பதால், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் இதிலிருந்து கிடைக்கிறது என்கிறார்.