தளர்த்தப்பட்ட விதிகள் தனியார் பல்கலைக்கு கதவுகள் திறப்பு ஏழை மாணவர்களின் படிப்புக்கு பூட்டு; பாமர மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாகும் அபாயம்: சமூக நீதியை கேள்விக்குறியாக்கும் இந்த முடிவுக்கு அரசின் பதில் என்ன?
100 ஏக்கர் நிலம் இல்லாமல் பல்கலைக்கழகம் தொடங்க முடியாது என்ற தமிழ்நாடு அரசின் முந்தைய கட்டுப்பாடு, ஒரே அறிவிப்பில் தகர்க்கப்பட்டுள்ளது. தவெக அரசின் இந்த புதிய தளர்வால், சென்னையில் இனி 12 ஏக்கர் இருந்தாலே தனியார் பல்கலை அமைக்க முடியும். இந்த தளர்வு உயர்கல்வியின் திசையையே மாற்றக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
2019ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி, தனியார் பல்கலைக்கழகம் அமைக்க அல்லது ஒரு கல்லூரியை நிகர்நிலை பல்கலையாக மாற்ற குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலமும், ரூ.50 கோடி நிரந்தர அறக்கட்டளை நிதியும் தேவை என்ற கட்டுப்பாடு இருந்தது. இந்த 2 முக்கிய நிபந்தனைகளும் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 12 ஏக்கர், சென்னை தவிர பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 18 ஏக்கர், மற்ற பகுதிகளில் 25 ஏக்கர் நிலம் இருந்தால் போதும்;
தனியார் கல்லூரியை நிகர்நிலை பல்கலையாக மாற்ற முடியும். அதேபோல், தனியார் பல்கலைக்கழகம் கலைக்கப்படும் சூழலில் அதன் நிர்வாகச் செலவுகளைச் சமாளிக்க வைத்திருக்க வேண்டிய நிரந்தர அறக்கட்டளை நிதியையும் ரூ.50 கோடியில் இருந்து ரூ.25 கோடியாகக் குறைக்க இந்த தளர்வு வழிவகுக்கிறது. இது நடைமுறைக்கு வந்தால் உயர்கல்வித் துறையில் தனியாரின் ஏதேச்சதிகாரம் அபரிமிதமாக அதிகரிக்கும் என்ற கவலையும் எழுந்துள்ளது.
ஏற்கெனவே கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் தனியார் பங்களிப்பு கணிசமாக உள்ள நிலையில் வழங்கப்பட்டுள்ள இந்த தளர்வு கல்வித் துறையின் கட்டமைப்பையே மாற்றக்கூடும் என விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தனியார் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகங்களாக மாறும் அபாயம் உள்ளது.
* மானியக் கோரிக்கைக்கு 15 நாள் கழித்து…
உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி நடைபெற்று முடிந்து விட்டது. அதன் பிறகு ஏறக்குறைய 15 நாள் கழித்து இப்படியொரு சட்டத்திருத்த மசோதாவை கூட்டத்தொடரின் கடைசி நாளில் கொண்டு வந்திருப்பது ஏன் என்பது எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் ஐயப்பாடு. கூட்டத்தொடரின் கடைசி நாளில் வெற்று குற்றச்சாட்டுகள் மூலம் அவையின் கவனத்தை திசை திருப்பியது, உயர் கல்வி பொறுப்புகள் அனைத்தையும் தனியாரிடம் தாரை வார்க்கும் திருத்தத்துக்காக திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டதா என்கின்றனர் அவர்கள்.
அதுமட்டுமின்றி, தனியார் பல்கலைக்கழகம் அமைக்க செலுத்த வேண்டிய நிரந்தர அறக்கட்டளை நிதியை , ஏற்கெனவே தனியார் பல்கலைக்கழகமாக அனுமதி பெற்று இயங்கிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் நீட்டிக்கப்படும் என பின்தேதியிட்ட சலுகை ஏன் வழங்கப்படுகிறது என எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, கல்வி மற்றும் அறிவார்ந்த சமூக நலனில் அக்கறை கொண்ட அறிஞர்களும் முன்வைக்கின்றனர்.
ஒரு பல்கலைக்கழகம் திவாலானால் அங்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்டதுதான் இந்த நிரந்தர நிதி நிபந்தனை. இதை பாதியாக குறைத்து பின் தேதியிட்டு நீட்டிப்பதன் மூலம் தற்போதுள்ள பல்கலைக்கழகங்களும் அந்த டெபாசிட் நிதியை திரும்பப் பெற வழி வகுக்கும். இது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு வேட்டு வைக்கும் முயற்சி என்று கல்வி அக்கறை கொண்ட அறிஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
* சமூக நீதிக்கு வேட்டு
அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் சம வாய்ப்பு, உரிமைகளை வழங்குவதும், சாதி, மத, இன, பாலின மற்றும் வர்க்க பேதமின்றி விளிம்புநிலை மக்களைக் கைதூக்கி விடுவதுதான் உண்மையான சமூக நீதி. ஆனால் தவெக அரசின் இந்த முடிவு, ஏழைகளுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் செயல். சமூகநீதி அடிப்படையிலான இடஒதுக்கீடு, கட்டணக் கட்டுப்பாடு சாத்திமின்றி போகும் அபாயம் உள்ளதால் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி வாய்ப்பு சமமாக கிடைக்குமா? என்ற கேள்வியை கல்வி அறிஞர்களும் எதிர்க்கட்சியினரும் முன்வைக்கின்றனர்.
தவெக அரசு பொறுப்பேற்றவுடன், ஒற்றை காசு வாங்க மாட்டோம். எனவே, கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கட்டணத்தை குறைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது. இருப்பினும் கல்விக் கட்டணம் அதிகமாக வாங்கப்படுவதாக பெற்றோர் பலர் புகார் கூறி வருகின்றனர். இந்த கட்டணம் உண்மையில் குறைக்கப்பட்டதா என்பதை கண்காணிக்கவே இல்லை. அப்படியிருக்க, ஒரு தனியார் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றினால் கல்வி கட்டணம் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுமே…
அப்படியிருக்க இந்த பாதிப்புகள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இப்படியொரு முடிவை தவெக அரசு எடுக்க காரணம் என்ன? இது ஒன்றிய அரசின் அழுத்தமா? அல்லது ஆளுங்கட்சிக்கு நெருக்கமான மற்றும் ஆதரவாக உள்ள கல்வி நிறுவன உரிமையாளர்கள் பலன் பெறும் வகையில் திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவா என்கின்றனர் கல்வி அறிஞர்கள். அரசியல் தரப்பிலும், தவெக அரசு தனக்கு வாக்களித்த அப்பாவி மக்கள் குடும்பத்து இளைஞர்களின் எதிர்காலத்தையே சூனியமாக்கி விட்டது என விமர்சிக்கின்றனர்.
‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்பது, கல்வியின் அவசியத்தை உணர்த்த கூறப்பட்ட வரிகள். இதனால்தான் அரசே கல்வி நிறுவனங்களை நடத்துகிறது. மிகக் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வகை செய்கிறது. அப்படியிருக்க, இந்த நோக்கத்துக்கே எதிராக தவெக அரசு எடுத்துள்ள முடிவின் நோக்கம், உண்மையில் கல்வித்தரத்தை உயர்த்துவதா? அல்லது கல்வி நிறுவனங்களின் வருவாயை பெருக்குவதா என்பதுதான் அனைவரின் முன்னிற்கும் கேள்வி.
* ஆசிரியர்களுக்கு பாதிப்பு
புதிய தனியார் பல்கலைக்கழகங்கள் பெருகும்போது ஆசிரியர் நியமனம், ஊதியம், பணிநிலைத்தன்மை ஆகியவற்றிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அஞ்சப்படுகிறது. இதனால் பணி பாதுகாப்பு, நியாயமான ஊதிய நிர்ணயம் பாதிக்கப்படலாம் எனவும், பணி அழுத்தம் நெருக்கடிகளுக்கு ஆசிரியர்கள் , ஊழியர்கள் ஆளாக நேரிடலாம் என ஆசிரியர், ஊழியர் அமைப்பினர் கவலை தெரிவிக்கின்றனர்.
* உள் கட்டமைப்புகள் சாத்தியமா?
நகரங்களில் நிலப்பற்றாக்குறை இருப்பதால் தான் நிலத் தகுதி குறைக்கப்பட்டது என, விதிகளை திருத்தியதை அரசு தரப்பு நியாயப்படுத்துகிறது. ஆனால், குறைவான நிலத்தில் விடுதிகள், விளையாட்டு கட்டமைப்புக்கான வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்துவது சாத்தியமற்றதாகிவிடும் என எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
* கட்டணச் சுமை அதிகரிக்கும்
நன்கொடை/ கேபிடேஷன் கட்டணம், கட்டண வெளிப்படைத் தன்மை , கட்டணத்தை திரும்ப பெறுதல் போன்றவைதொடர்பாக விதிமுறைகள், கட்டுப்பாடுகளை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வகுத்துள்ளது. கல்லூரியின் தகவல் கையேட்டில் கட்டண விவரங்கள் வெளியிடப்பட வேண்டும்.
கட்டண முறை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. தற்போதே சில தனியார் கல்லூரிகளில் பொறியியல் போன்ற படிப்புகளுக்கு பல லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முழு அதிகாரமும் தனியாரிடம் போய்விட்டால் இந்த கட்டுப்பாடுகள் இருக்காது. இஷ்டத்துக்கு வசூலித்தால் மாணவர்களுக்கு கட்டண சுமை ஏற்படும் என எச்சரிக்கின்றனர் கல்வி அறிஞர்கள்.
* இட ஒதுக்கீடு பறிபோகும்
தமிழகத்தில் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது. பிற்படுத்தப்பட்டோர் 30%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினர் 20%, பட்டியலினத்தவர் 18%, பழங்குடியினர் 1 % இடஒதுக்கீடு பெறுகின்றனர். இதுபோல், கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டண சலுகை, உதவித்தொகை வழங்கப்படுகிறது. இன்றும் இதில் பல குடும்பங்கள் பயன்பெறுகின்றன. இதெல்லாம் முழுமையான தனியார் ஆதிக்கத்தில் சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
* தனியார் பல்கலை... சில தகவல்கள்
* ஒரு தனியார் கல்லூரி தனியார் பல்கலைக்கழகமாக மாறும்போது அல்லது அந்தத் தகுதியைப் பெறும்போது பல முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.
* தங்களின் செயல்பாட்டுச் செலவுகள், உள்கட்டமைப்பு மற்றும் பேராசிரியர்களின் சம்பளம் போன்ற அனைத்தையும் மாணவர்களிடம் வசூலிக்கும் கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடைகள் மூலமே திரட்டுகின்றன.
* பல்கலையின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப கட்டணங்களை தாங்களாகவே நிர்ணயிக்க முடியும். இதனால், தனியார் கல்லூரியாக இருக்கும்போது இருந்ததை விடவும் கட்டணம் அதிக வாய்ப்பு.
* இந்தியாவில் 455 தனியார் பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக யுஜிசி புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. பெரும்பாலானவை வணிக நோக்கத்திற்காக மட்டுமே செயல்படுவதாக கூறப்படுகிறது.
* பல்கலைக்கழகங்களில் உள்ள கடுமையான இட ஒதுக்கீட்டு விதிகள் மற்றும் சலுகைகள் சில நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் முழுமையாகப் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
* மாணவர்கள் எதிர்கொள்ளும் அபாயம் என்ன? கல்விக்கதவை மூடினால் குற்றக்கதவுகள் திறக்கும்? ஆய்வுகள் சொல்லும் எச்சரிக்கை
ஒரு மாணவனுக்கு பொருளாதார காரணங்களால் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படுவது அவரது படிப்பை மட்டும் பாதிப்பதில்லை. வேலைவாய்ப்பு, வருமானம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றிலும் தொடர் பாதிப்பை ஏற்படுத்தலாம். கல்விக்கும் குற்றச்செயலைக் குறைப்பதற்கும் தொடர்பு இருப்பதாக யுனெஸ்கோ உள்ளிட்ட சர்வதேச ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன.
* ஸ்வீடன்: ஒருவர் கூடுதலாக ஓராண்டு கல்வி பெறுவது, வன்முறைக் குற்றத்துக்கான தண்டனை வாய்ப்பு 10%, சொத்துக் குற்றத்துக்கான தண்டனை வாய்ப்பு 14%, பிற குற்றங்களுக்கான தண்டனை வாய்ப்பு சுமார் 6% குறைத்ததாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
* கல்வி சீர்திருத்தம் மூலம் கட்டாய கல்வி காலம் அதிகரித்ததால், கூடுதலாக ஓராண்டு கல்வி பெற்ற ஆண்களின் குற்றத் தண்டனை வாய்ப்பு 6.7% குறைந்தது; சிறை செல்லும் வாய்ப்பு 15.5% குறைந்தது என மற்றொரு ஆய்வு கூறுகிறது.
* இந்தியாவில் 33 மாநிலங்கள்: 2001 முதல் 2013 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 33 இந்திய மாநிலங்களின் தரவுகளை ஆய்வு செய்த ஆய்வில், மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 1% அதிகரித்தபோது, மொத்தக் குற்ற விகிதம் 8% குறைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
* இடைநிற்றல் குழந்தைகள்: 330 பள்ளி இடைநிற்றல் செய்த ஆண் குழந்தைகளை ஆய்வு செய்த ஒரு ஆய்வில், சுமார் 70% பேர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சமூக எதிர்ப்பு நடவடிக்கைககளில் ஈடுபட்டதாகவும் 51% பேர் போலீசாரால் பிடிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
* எனவே, தவெக அரசின் இந்த முடிவால் கல்வி பாதிக்கப்படும் மாணவர்கள், எதிர்காலத்தில் செயின்பறிப்பு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான நிர்பந்தத்துக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
* ஒன்றிய அரசுக்கு அடிபணிந்து கொண்டு வரப்பட்ட திருத்தம்
உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் இந்த திருத்தம் உதவும் என்று அமைச்சர் பெ. விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், இந்த விதித் தளர்வுகள் தமிழக அரசின் தனிப்பட்ட முடிவு மட்டுமல்ல. ‘ஒன்றிய அரசின் ‘விதிமுறை இணக்கச் சுமையைக் குறைத்தல் மற்றும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் - 2ம் கட்டம்’ பரிந்துரைகளையும் ஆய்வு செய்த பிறகே நிலம் மற்றும் அறக்கட்டளை நிதி தொடர்பான விதிகளை மாற்ற முடிவு செய்ததாக தமிழக அரசு சட்ட முன்வடிவில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில் கேபினட் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘விதிமுறைச் சுமை குறைப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தளர்வுக்கான இரண்டாம் கட்டப் பணிக்குழு’ (Task Force on Compliance Reduction and Deregulation), மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேவையற்ற அல்லது காலாவதியான கட்டுப்பாடுகளை கண்டறிந்து, சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வழிகாட்டும் பணியை மேற்கொண்டது. இதை அடியொற்றி இந்த விதிகள் தளர்வு செய்துள்ளதன் மூலம் ஒன்றிய அரசுக்கு விஜய் அரசு பணிந்து விட்டதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
* கல்வியில் சிறந்த தமிழ்நாடு
தமிழ்நாடு மாநில உயர் கல்வி கவுன்சில் தரவுகளின்படி, தமிழகத்தில் மொத்தம் 568 உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் இந்த ஆண்டு மட்டும் 14 அதிகரித்துள்ளது. இவற்றில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 32 லட்சம். இது முந்தைய ஆண்டை விட 4.8 சதவீதம் அதிகம். தமிழ்நாடு அரசு தரவுகளின்படி மொத்த அரசு கல்லூரிகள் - 188, அரசு உதவி பெறும் கல்லூரிகள்-161, சுயநிதிக் கல்லூரிகள் - 1,293 என மொத்தம் 1,642 உள்ளன. உயர் கல்வி தொடர்பான ஒரு ஆய்வறிக்கைப்படி, உயர் கல்வியில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
* உயர்கல்வி மொத்த சேர்க்கை விகிதம் 53.3% (தேசிய சராசரி 30%) மாணவர்கள் 51.6% மாணவிகள் 53.1%
* 18-25 வயதுடையவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தவர்கள் 35.8 லட்சம் பேர்
* தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.
* உயர்கல்வி துறையில் தமிழகத்தில் 2,18,656 ஆசிரியர்கள்/ பேராசிரியர்கள் உள்ளதாக அகில இந்திய உயர் கல்வி ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* 7 ஆண்டுகளில் 8 தனியார் பல்கலைக்கழகங்கள் 2019ம் ஆண்டு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, தமிழகத்தில் இதுவரை 8 தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
* மாவட்ட வாரியாக நில தகுதி பெறும் கல்லூரிகள்
புதிய தளர்வு அமலுக்கு வந்தால் சென்னையில் லயோலா கல்லூரி (79.5 ஏக்கர்) ஆகியவை கூட பல்கலைக்கழகமாகும் நில தகுதி பெற்று விடும். இதன்படி மாவட்ட வாரியாக எண்ணிக்கை வருமாறு: 25 ஏக்கருக்கு மேல் உள்ள கல்லூரிகளில் சென்னை மாவட்டத்தில் 4, செங்கல்பட்டு- 2, கோயம்புத்தூர் - 4, மதுரை- 4, திருச்சி- 1, திருநெல்வேலி- 1, ஈரோடு -3, வேலூர்-1, தஞ்சாவூர்-1, புதுக்கோட்டை - 1 என 22 கல்லூரிகள் உள்ளன.
18 முதல் 25 ஏக்கர் வரை உள்ள கல்லூரிகளில் சென்னையில் 3, மதுரை- 1, திருநெல்வேலி-1, சேலம்-1, பெரம்பலூர்-1, திருப்பத்தூர்-1 என 8 கல்லூரிகள் உள்ளன. 12 முதல் 18 ஏக்கர் வரை நிலப்பரப்பு கொண்ட கல்லூரிகளில் சென்னையில் 2, செங்கல்பட்டு- 1 என 3 கல்லூரிகள் உள்ளன. இதன்படி புதிய நில தகுதி வரம்புக்குள் வரும் கல்லூரிகளாக சுமார் 33 கல்லூரிகள் கல்லூரி இணையதள விவரங்கள் மற்றும் பிற ஆதாரப்பூர்வ தகவல்கள் மூலம் கிடைத்துள்ளன.


