சென்னை: தனியார் நிறுவனத்தின் தாமதத்தால் அகவிலைப்படி கிடைக்கவில்லை, என அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் லியாகத் அலி, பொதுச்செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் 30.10.2026 அன்று அகவிலைப்படி நிலுவை தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டது.
இதற்கான அரசாணை 31ம் தேதியே தமிழக அரசு விரைந்து விடுத்து நடவடிக்கை எடுத்தது. ஆனால் அரசின் இந்த விரைவான நடவடிக்கைக்கு நடைமுறை வடிவம் கொடுக்க வேண்டிய கருவூல கணக்கு துறையின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டமாக IFHRMS மென்பொருளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை செயல்படுத்த வேண்டிய தனியார் நிறுவனமான விப்ரோ இதுவரை உரிய பணிகளை தொடங்காமல் காலதாமதம் செய்து வருவது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு எடுத்துள்ள நல்ல முடிவின் பயன் உரிய நேரத்தில் ஊழியர்களை சென்றடையாமல் போகிறது. குறிப்பாக 1.11.2026 மற்றும் 2.11.202 ஆகிய 2 நாட்களாக IFHRMS மென்பொருள் முடக்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்களுக்கான ஊதிய பட்டியல்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளைக்கூட தயாரித்து கருவூல கணக்கு துறைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மென்பொருள் மேம்படுத்தல் என்ற பெயரில் விப்ரோ நிறுவனம் பணிகளை இழுத்தடித்து வருவதாக தெரிகிறது.
அரசின் ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள தனியார் நிறுவனம் தனது பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்ளாததால், அகவிலைப்படி நிலுவையை எதிர்பார்த்து காத்திருக்கும் சுமார் 9 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தேவையற்ற மனஉலைச்சலுக்கும், அலைக்கழிப்புக்கும் ஆளாகியுள்ளனர். தனியார் நிறுவனம் காலதாமதம் செய்வது, ‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதையாக’ அமைந்துள்ளது.
எனவே தமிழக அரசும், கருவூல கணக்கு துறையும் இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, IFHRMS மென்பொருளில் மேற்கொள்ள வேண்டிய அகவிலைப்படி தொடர்பான மேம்பாட்டு பணிகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவு செய்ய வேண்டும். தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கையின் பலன் எவ்வித தடையுமின்றி சென்றடைய வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் உறுதியான எதிர்பார்ப்பாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


