தனியார் மருத்துவ கல்லூரிகளில் கெடுபிடி வசூல் செய்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கெடுபிடி வசூல் செய்வதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.8.80 கோடி மதிப்பீட்டில் தீக்காய பிரிவில் அதிநவீன மருத்துவ உபகரணங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
அப்போது அமைச்சர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் 2வது பெரிய தீக்காய சிகிச்சை மருத்துவமனையாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இம் மருத்துவமனை 1973ம் ஆண்டு 2 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டு, தற்போது 75 படுக்கை வசதிகளுடன் கூடிய தீக்காய சிகிச்சை பிரிவாக சிறப்புடன் செயல்படுகிறது. இப்பிரிவில் கூடுதல் வசதிகளை மேம்படுத்திடும் வகையில் ரூ.8.80 கோடி மதிப்பீட்டில் பல்வேறு தீக்காய பிரிவு உபகரணங்கள் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் வாங்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் அதிக பணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்துள்ளன. பொதுவாக ஒரு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிஅரசர் தலைமையில் 4 பேர் உறுப்பினர்கள் கட்டண நிர்ணய குழுவில் இருக்கிறார்கள். இந்த கட்டண நிர்ணய குழுதான் ஆண்டுதோறும் மருத்துவக் கல்வி மாணவர்களின் கட்டணங்களை நிர்ணயிக்கிறது. இந்நிலையில் ரூ.3.5 லட்சம் வரை கறாராக வசூலிக்கிறார்கள் என்பது போல ஒரு செய்தி வந்திருக்கிறது.
இந்த செய்தியினை பார்த்தவுடன் உயர் அலுவலர்களுடன் கலந்து பேசி, இது சம்மந்தமான புகார்கள் மாணவர்கள் சார்பாகவோ அல்லது பெற்றோர்கள் சார்பாகவோ வந்தால் கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படும். கட்டணங்கள் வசூலிப்பது தொடர்பாக இந்த ஆண்டு 2 புகார்கள் வந்துள்ளன. அதனையும் விசாரித்து நடவடிக்கை எடுப்போம். பாதிக்கப்பட்டவர் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


