சிறைத்துறை வழிகாட்டு நெறிமுறைக்கு பாராட்டு: அனைத்து சிறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: சிறைத்துறை வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள ஐகோர்ட் கிளை, இதனை அனைத்து சிறைகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த தனலட்சுமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், என் கணவர் துரைப்பாண்டி, திருச்சி சிறையில் விசாரணைக் கைதியாக உள்ள அவரை ஆஜர்படுத்துமாறும், அவருக்கு தேவையான சிகிச்சை, சட்ட உதவி வழங்குமாறும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.விஜயகுமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கணவர் தனிமைச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். அவருடன் உள்ள மற்றொரு சிறைவாசி கதிரேசனும் சிறைச்சாலையில் உள்ள தொலைபேசியில் இருந்து ஒரே நேரத்தில் பேசியுள்ளதால், சிறைச்சாலை கையேட்டை மீறுவதாக கூறி தனிமை சிறையில் அடைத்துள்ளதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து அறிக்கையளித்துள்ளார். தனிமைச்சிறையில் இல்லை என்றாலும், சிறைவாசிகள் ஒருவருக்கொருவர் சுயாதீனமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இனிமேல், சிறைவாசிகளுக்கு சிறு தண்டனை வழங்கும்போது, கண்டிப்பாக எதற்காக இந்த தண்டனை வழங்கப்படுகிறது என்ற விபரங்களை எழுத்துப்பூர்வ ஆவணமாக சிறை நிர்வாகம் வழங்க வேண்டும்.
இது அவருடைய பதிவேடுகளிலும் பதிவு செய்ய வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளை சிறைத்துறை வகுத்துள்ளது என சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பாராட்டுகிறோம். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்ட மத்திய, கிளை சிறைகளுக்கும் சிறைத்துறை தலைவர் தரப்பில் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும். அனைத்து சிறைகளிலும் இதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

