Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறை உணவில் விஷம் கலந்து கொடுத்ததால் எனக்கு புற்றுநோய்: சிவசேனா எம்பி பகீர் குற்றச்சாட்டு

மும்பை: சிறையில் உணவில் விஷம் கலந்ததால் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டதாக உத்தவ் தாக்கரே சிவசேனா பிரிவு எம்பி சஞ்சய் ராவத் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் பத்ரா சால் நில மோசடி வழக்கில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் ராவத், கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்ட அவர், 101 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு 2022ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி ஜாமீனில் விடுதலையானார்.

சிறையில் தான் அனுபவித்த கொடுமைகள் குறித்து புத்தகம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார். இந்நிலையில், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் தீவிர ஆதரவாளரான சஞ்சய் ராவத்துக்கு கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் வயிற்றில் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்காக அவர் தீவிர கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் ராவத், ‘சிறையில் எனக்கு வழங்கப்பட்ட உணவு அல்லது குடிநீரில் மெல்லக் கொல்லும் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.

சிறையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய நச்சுத்தன்மை பரிசோதனை செய்து கொள்ளுமாறு ராகுல் காந்தி எனக்கு அறிவுறுத்தினார். அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் எங்களைப் போன்றவர்களுக்கு சிறையில் இதுபோன்ற அநீதிகள் நிகழ அதிக வாய்ப்புள்ளது’ என்று கூறினார்.