காலியாக உள்ள முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை: காலியாக உள்ள முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என போற்றப்படும் தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காகவும் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேசமயம் பெரும்பாலான மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கிருஷ்ணகிரி, கரூர், திருப்பூர், சிவகங்கை, பெரம்பலூர், நீலகிரி, திருவள்ளூர், தஞ்சாவூர், வேலூர், தேனி, சென்னை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், அரியலூர், ராணிபேட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை என 18 மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்கள் இல்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 13 புதிய தொடக்கப் பள்ளிகளும், 5 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், அவற்றை செயல்படுத்துவதற்கான நிதி மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கும் அனுமதி அளித்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த புதிய பள்ளிகள் பட்டியலில் உள்ள கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவள்ளூர், வேலூர், சென்னை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. புதிய பள்ளிகள் தொடங்குதல், தரம் உயர்த்துதல் போன்ற முக்கியமான பணிகளை செய்யும் இடத்தில் அந்த மாவட்ட கல்வித் துறையின் முதன்மை அதிகாரி இல்லாத பட்சத்தில் எவ்வாறு சிறப்பாக செயல்படுத்த முடியும்?
இதேபோல் 11-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை ஊக்கப்படுத்தி 11, 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற தயார்படுத்துதல், அரசு பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் 'நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி' திட்டத்தின் வாயிலாக கூடுதல் கவனம் தேவை என கண்டறியப்படும் மாணவர்களின் கற்றல் திறனை முன்னேற்றுவதற்கு பொறுப்பாசிரியர்களை கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்துவதை கண்காணித்தல், 'தடைகளைத் தாண்டி தேர்ச்சி' திட்டத்தின் மூலம் பள்ளி செல்லா மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்காக மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கல்வியின் அவசியத்தை விளக்கி விழிப்புணர்வூட்டுதல், கல்வியாண்டின் இறுதிக் காலம் என்பதால்
மாணவர்களுக்கான கலை, கலாச்சார, விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், ஆசிரியர்கள் மாணவர்களிடையேயான உறவை மேம்படுத்துதல், ஆசிரியர்கள் மாணவர்கள் குறித்த புகார்களை உடனுக்குடன் விசாரித்து தீர்வு காணுதல், பருவ மழைக் காலம் என்பதால் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், எல்லாவற்றிலும் முக்கியமாக 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 2026 தொடங்கியது முதல் சுமார் இரண்டரை மாத காலம், சுமார் 17 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்ற பொதுத்தேர்வுகளில் அதிக கவனம் செலுத்துதல், பாடங்களை விரைவாக முடித்து மாணவர்கள் தேர்வினை எதிர்கொள்வது குறித்த பயிற்சியளித்தல் என கல்வித்துறையின் பல்வேறு பணிகளையும், திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டியது அந்தந்த மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலரின் சீரிய கடமைகளாகும்.
இவைகள் மட்டுமல்லாது தனியார் பள்ளிகளில் நடைபெறும் நிகழ்வுகள், குறைபாடுகள் குறித்த பெற்றோர்களின் புகார்கள் மீதான நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டிய பணியும் முதன்மை கல்வி அலுவலரின் பணி ஆகும். கல்வித்துறையில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மாவட்டத்தின் முதன்மை கல்வி அதிகாரி பல மாவட்டங்களில் இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது. எனவே உடனடியாக காலியாக உள்ள மாவட்டங்களுக்கான முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.