Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நூற்றாண்டு விழா போட்டிக்கு அனைவரும் அகமதாபாத் வாருங்கள்…இளவரசர் எட்வர்ட் அழைப்பு

கிளாஸ்கோ: இந்தியாவில் 2030ல் நடைபெற உள்ள நூற்றாண்டு விழா காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்க அனைத்து நாடுகளையும் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஸ்காட்லாந்து இளவரசர் எட்வர்ட் அழைப்பு விடுத்துள்ளார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடர், இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நிறைவடைந்தது. இந்த தொடரில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்று 4வது இடம் பிடித்தது.

இந்தியா அதிக பதக்கங்களை குவிக்கக் கூடிய துப்பாக்கிசுடுதல், மல்யுத்தம், கிரிக்கெட், பேட்மின்டன், டேபிள் டென்னிஸ், ஹாக்கி போன்ற விளையாட்டுகள் இல்லாத நிலையிலும், ஸ்காட்லாந்து தொடரில் இந்திய வீரர்கள் திருப்திகரமான பதக்க வேட்டை நடத்தி அசத்தினர்.

ஓவோ ஹைட்ரா அரங்கில் நடைபெற்ற வண்ணமயமான நிறைவு விழா அணிவகுப்பில் பாக்சிங் நட்சத்திரம் ஜெய்ஸ்மைன் லம்போரியா தேசியக் கொடி ஏந்தி தலைமை வகிக்க, இந்திய குழுவினர் உற்சாகமாக நடைபோட்டனர். கிளாஸ்கோ போட்டித் தொடர் நிறைவடைந்ததாக முறைப்படி அறிவித்துப் பேசிய இளவரசர் எட்வர்ட்ஸ், ‘இந்த விளையாட்டுத் தொடர் இவ்வளவு சிறப்பாக நடைபெற உழைத்த, ஆதரித்த கிளாஸ்கோ நகர மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காமன்வெல்த் அமைப்பின் கோட்பாட்டையும், மதிப்பையும் நீங்கள் மீண்டும் உயர்த்திப்பிடித்துள்ளீர்கள்.

காமன்வெல்த்தை சேர்ந்த அனைத்து நாடுகள்/பிராந்தியங்களை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளையும் அடுத்து 2030ல் இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெற உள்ள நூற்றாண்டு விழா போட்டியில் பங்கேற்குமாறு அழைப்பதில் பெருமை கொள்கிறேன்’ என்றார்.பின்னர், அரங்கில் பட்டொளி வீசி பறந்துகொண்டிருந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி கொடி கீழிறக்கப்பட்டு, கிளாஸ்கோ லார்ட் மெக்லாரென் அதை ஸ்காட்லாந்து போட்டிக்கான துணை தலைவர் சூசன் ஜாக்சனிடம் வழங்க, அவரிடம் இருந்து ஸ்காட்லாந்து நெட் பால் வீரர் எமிலி நிகோல், காமன்வெல்த் விளையாட்டு தலைவர் டாக்டர் டொனால்டு ருகேர், இந்திய நட்சத்திரம் நீரஜ் சோப்ரா, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா ஆகியோரது கரங்களில் தவழ்ந்து இறுதியாக குஜராத் துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்கவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நடிகை மனுஷி சில்லார் தலைமையிலான குழுவினர் வந்தே மாதரம் பாடலுக்கு நடனமாடி மெய்சிலிர்க்க வைக்க, பாடகர் சங்கர் மகாதேவன், அவரது மகன்கள் சித்தார்த், ஷிவம் உள்ளிட்ட குழுவினர் இசை மழை பொழிந்தனர்.அகமதாபாத் பற்றி விளக்கும் சிறப்பு வீடியோ ஒன்றும் திரையிடப்பட்டது. இந்திய சித்தார் கலைஞர் ரிஷப் ஷர்மா, ஸ்காட்லாந்து கலைஞர் ராஸ் அய்ன்ஸ்லி இணைந்து வழங்கிய இசை நிகழ்ச்சியும் ரசிகர்களின் பாராட்டுதல்களை அள்ளியது.