பிரதமர் மோடி வீடியோ நீக்கம் மெட்டா உலகளாவிய குழு இன்று, நாளை விளக்கம்: குழந்தைகள் பாலியல் வீடியோ குறித்து கேள்வி எழுப்ப திட்டம்
புதுடெல்லி: பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்டது தொடர்பாக மெட்டாவின் உலகளாவிய குழு இன்றும், நாளையும் விளக்கம் அளிக்க உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம் நடந்த போது, வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கும் வகையில் பிரதமர் மோடி முதல் செல்பி வீடியோ ஒன்றை பேஸ்புக்கில் வெளியிட்டார்.
அந்த வீடியோ திடீரென நீக்கப்பட்டதால் பெரும் சர்ச்சையானது. இந்த தவறுக்காக மெட்டா நிறுவனம் மன்னிப்பு கேட்டு மீண்டும் வீடியோவை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது. ஆனாலும் இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து மெட்டாவின் உயர்மட்ட உலகளாவிய குழு இன்றும், நாளையும் விளக்கமளிக்க இந்தியா வர இருக்கிறது.
இது குறித்து, சென்னை ஐஐடியின் ஏஐ4பாரத் எனும் ஏஐ மதிப்பீட்டு தளம், ஜோஸ் டாக்ஸ் ஏஐ அறிமுக நிகழ்ச்சியில் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் நேற்று பேசுகையில், ‘‘மெட்டா உலகளாவிய குழுவிடம், குழந்தைகள் பாலியல் வீடியோ குறித்து விசாரிக்கப்படும்.
இன்ஸ்டாகிராம் கட்டண விளம்பரங்களில் குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோக வீடியோ இடம் பெற்ற விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, செயற்கையாக உருவாக்கப்பட்ட தகவல்கள் எந்த அளவுக்கு கவனத்தில் கொள்ளப்படுகின்றன என்பது குறித்து விளக்கம் கேட்கப்படும்.
முக்கிய தலைவர்களின் கணக்குகளில் உள்ள வீடியோ, பதிவுகளை நீக்க வேண்டிய சூழல் ஏற்படும் போது, அதற்கான பாதுகாப்பு வழிமுறை இருக்க வேண்டும். இதைப் பற்றி எல்லாம் விசாரிக்கப்படும். இவற்றில் சில விஷயங்கள் ஏன் செயல்பட வேண்டிய விதத்தில் செயல்படவில்லை என்பதும், அதிலுள்ள சவால் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மெட்டாவிடம் இத்தகைய பிரச்னைகளை திறம்பட கையாளத் தேவையான தொழில்நுட்பம் இருக்க வேண்டும்’’ என்றார்.


