புதுடெல்லி: பிரதமர் மோடியின் பேஸ்புக் வீடியோவை தற்காலிகமாக நீக்கியதற்காக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஜூகர்பெர்க் மன்னிப்பு கேட்டதாக ஒன்றிய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்திய போது, இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து பிரதமர் மோடி செல்பி வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டார். இந்த வீடியோ சில மணி நேரம் நீக்கப்பட்டு, பின்னர் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
ஏஐயின் தானியங்கி தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வீடியோ நீக்கப்பட்டதாக மெட்டா மன்னிப்பு கேட்டது. ஆனாலும் இந்த விளக்கம் போதுமானதாக இல்லை என நோட்டீஸ் அனுப்பிய ஒன்றிய அரசு இவ்விவகாரத்தை மெட்டாவின் உலகளாவிய தலைமைக்கு கொண்டு சென்றது. இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான அதிகாரி ஜோயல் கப்லான் தலைமையில் உயர் அதிகாரிகள் குழு நேற்று டெல்லி வந்து ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகளை சந்தித்து 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து அக்குழுவினர், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து பேசினர். அப்போது, பிரதமர் மோடியின் வீடியோ நீக்கத்திற்கு மெட்டா சார்பில் உலகளாவிய அதிகாரி ஜோயல் கப்லான் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மெட்டா நிறுவனம் தனது தளங்களின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளை ஒப்புக் கொண்டதாகவும், பதிவுகளை நெறிப்படுத்துததில் ஏற்பட்ட தோல்விக்காக மெட்டா குழுவினர் மன்னிப்பு கேட்டதாகவும் வருத்தம் தெரிவித்ததாகவும் ஒன்றிய அரசு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இன்ஸ்டாகிராம் கட்டண விளம்பரங்களில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக வீடியோக்கள் பரப்பப்படுவதாக சமீபத்தில் ஒன்றிய அரசு மெட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதுதொடர்பாகவும் அரசு உயர் அதிகாரிகள் மெட்டா குழுவினரிடம் கவலை தெரிவித்தனர். அப்போது, குறிப்பிட்ட வகை வீடியோ, பதிவுகளை ஊக்குவிக்க அதிக பணம் செலுத்தப்பட்டது என்பதை மெட்டா குழு ஒப்புக் கொண்டதாகவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இந்த சந்திப்புகளில் நடந்த விஷயங்கள் குறித்து மெட்டா எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
* நாடாளுமன்ற நிலைக்குழு கெடு
பேஸ்புக்கில் இருந்து பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜூகர்பெர்க் 3 நாளில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென நாடாளுமன்ற நிலைக்குழு நேற்று கெடு விதித்திருந்தது. 3 நாளில் ஜூகர்பெர்க் மன்னிப்பு கேட்காவிட்டால், அவருக்கு வழங்கப்படும் சட்ட பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படலாம் என மக்களவை செயலகத்தின் இயக்குநர் ஜோதிர்மயி, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

