சென்னை: பிரதமர் மோடி மீண்டும் வரும் 28ம் தேதி தமிழகம் வருகிறார். மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். திமுக பலம் வாய்ந்த கூட்டணியுடன் களம் காண இருக்கிறது. கடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த அதே கட்சிகள் மீண்டும் இடம் பெற்றுள்ளன. இன்னும் சில கட்சிகள் வர உள்ளன. அதே நேரத்தில் அதிமுக தலைமையிலான அணியில் பாஜ, பாமக (அன்புமணி) அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை பரபரப்பாக நடத்தி வருகின்றன.
இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் முதல் பரப்புரை கூட்டம் கடந்த ஜனவரி 23ம் தேதி நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி, தமிழகத்திற்கு ‘‘இரட்டை இன்ஜின் ஆட்சி தேவை” என்றார்.
அதாவது, அதிமுக, பாஜவை என்ஜின்களாக உருவகப்படுத்தி பேசினார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். அதாவது முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘டப்பா இன்ஜின் ஆட்சி எல்லாம் தமிழகத்தில் எடுபடாது” என்று கருத்து தெரிவித்தார். மேலும் திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்தனர். மேலும் தவெக தலைவர் விஜய், கட்சியின் 3வது ஆண்டு விழாவில் பேசும்போது, ‘‘டாப் இன்ஜின் நாம் தான். தேர்தலில் நம்மை வெற்றி பெற வைக்க தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்’’ என்று பேசினார்.
மேலும் பிரதமர் மோடியின் இன்ஜின் தொடர்பான பேச்சுக்கும் பதிலடி கொடுத்தார். இப்படி, பிரதமர் மோடியின் ‘இன்ஜின்’ பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி மீண்டும் வருகிற 28ம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதற்கட்ட கட்டிடத்தையும் மோடி திறந்து வைக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் தோப்பூரில் 220 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 5 ஆண்டுக்கு பிறகு மே 22ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதற்கட்ட கட்டுமான பணிகள் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது. முதற்கட்ட கட்டுமான பணியை தொடங்கி வைத்த பின்னர், எய்ம்ஸ் கட்டுமான பணி நடைபெற்று வரும் மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மதுரை வரும் அவர் திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி 8 முறை தமிழகம் வந்து பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோக்களில் கலந்து கொண்டார். ஆனால், அந்த கூட்டணியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், பாஜ ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், பாஜ தலைவர்கள் அடுத்தடுத்து பிரசாரத்திற்காக தமிழகம் வருவார் என்று கூறப்படுகிறது.


