தாஷ்கண்ட்: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார். மத்திய ஆசிய நாடுகள் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு 4 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி நேற்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, பயணத்தின் முதல்கட்டமாக உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார். அங்கு தலைநகர் தாஷ்கண்ட் விமான நிலையத்தில் தரையிறங்கிய மோடியை உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயே நேரில் சென்று உற்சாகமாக வரவேற்றார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தன் எக்ஸ் பதிவில், “அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவின் அன்பான வரவேற்புடன் தாஷ்கண்டில் வந்திறங்கினேன். அவரது இந்த சிறப்பான செயலுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உஸ்பெகிஸ்தானுக்கு நான் மேற்கொள்ளும் நான்காவது பயணம் இது. இது நமது இரு தரப்பு உறவுகளின் ஆழத்தையும், வளர்ந்து வரும் வேகத்தையும் பிரதிபலிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுதந்திரம் மற்றும் நற்பண்புகளின் விழுமியங்களை பறைசாற்றும் வகையில், அந்நாட்டின் 30வது சுதந்திர ஆண்டை குறிக்கும் விதமாக கடந்த 2021ம் ஆண்டு உருவாக்கப்பட்ட யாங்கி உஸ்பெகிஸ்தான் பூங்காவுக்கு பிரதமர் மோடியும், அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவும் சென்றனர். அங்குள்ள நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து வர்த்தகம், கல்வி, எரிசக்தி, முதலீடு, டிஜிட்டல் இணைப்பு, பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக பிரதமர் மோடியும், உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவும் இன்று பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர்.
இதுதொடர்பாக உஸ்பெகிஸ்தான் புறப்படும் முன் பிரதமர் மோடி வௌியிட்ட அறிக்கையில், “வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் இணைப்பு, பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவது குறித்தும், வளர்ந்த இந்தியா மற்றும் புதிய உஸ்பெகிஸ்தான் ஆகிய நமது பொதுவான தொலைநோக்கு பார்வைகளை முன்னெடுத்துவது செல்வது குறித்தும் அதிபர் மிர்சியோயேவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்” என தெரிவித்திருந்தார்.



