Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

இந்திய-அமெரிக்க ஒப்பந்தம், எல்லை பிரச்னை, 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்; உண்மையை கண்டு ஒன்றிய அரசு பயப்படுகிறது: பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்கட்சி எம்பிக்கள் போர்க்கொடி

புதுடெல்லி: இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் எல்லைப் பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி காரணமாக 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உண்மையை கண்டு ஒன்றிய அரசு பயப்படுகிறது என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். பின்னர் 30ம் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த 1ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வரும் 13ம் தேதி வரை நடைபெறும் முதல்கட்ட கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன. இன்று மாலை பிரதமர் மோடி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான உரையை நிகழ்த்துகிறார்.

பின்னர் சுமார் ஒரு மாத காலம் இடைவெளிக்குப்பின் மார்ச் 9ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. இந்த 2ம் கட்ட அமர்வில் பல்வேறு துறைகளுக்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறும். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 2ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும். முன்னதாக நேற்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, சமீபத்தில் ஏற்பட்ட இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பல்வேறு அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அமெரிக்காவில் அதானி குழுமத்தின் மீது தொடரப்பட்ட வழக்கு மற்றும் சில சர்ச்சைக்குரிய ரகசிய ஆவணங்களைக் குறிப்பிட்டு, பிரதமர் மோடி ‘கடுமையான நெருக்கடி’ காரணமாகவே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய விவசாயிகளின் நலன்கள் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் நாட்டை விட்டுக் கொடுத்துவிட்டார் என்றும் ராகுல் காந்தி பகிரங்கமாகச் சாடினார்.

மேலும் கடந்த 2020ம் ஆண்டு நடந்த இந்திய - சீன எல்லை மோதல் குறித்த விவாதம் நடைபெற்றபோது, முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவணே எழுதிய வெளியிடப்படாத சுயசரிதை புத்தகத்தில் உள்ள சில தகவல்களை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி பேச முயன்றார். இதற்கு அவைத் தலைவர் அனுமதி மறுத்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆவேசமாகச் செயல்பட்டனர். அப்போது அவைத் தலைவரின் இருக்கையை நோக்கி காகிதங்களை வீசி எறிந்ததாகக் கூறி எதிர்க்கட்சியினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவையில் அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறி, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்கள் முழுவதற்கும் 8 உறுப்பினர்களை சபாநாயகர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். அதன்படி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், குர்ஜீத் சிங் ஆஜ்லா, ஹிபி ஈடன், டீன் குரியகோஸ், அம்ரிந்தர் சிங் ராஜா வாரிங், டாக்டர் பிரசாந்த் யாதவ்ராவ் படோல், சாமலா கிரண் குமார் ரெட்டி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் ஆகிய 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பெரும் போராட்டக்களமாக மாறின.

தொடர்ந்து, இன்று மேற்கண்ட குற்றச்சாட்டுகள் மற்றும் ஒன்றிய அரசுக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். நாடாளுமன்ற படிக்கட்டுகளில் நின்றவாறு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் பதாகைகளில் ‘பிரதமர் சமரசம் செய்து கொண்டார்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. வர்த்தக ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், நாட்டின் நலன் காக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டதால் அவை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கூறுகையில், ‘எதிர்க்கட்சித் தலைவர் உரிய ஆதாரத்துடன் பேச முயன்றாலும் அவரது குரல் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து நசுக்கப்படுகிறது. எல்லைப் பிரச்னையில் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் மெத்தனப் போக்கை முன்னாள் ராணுவ தளபதியின் புத்தகம் வெளிச்சம் போட்டுக் காட்டும் என்பதால் அதன் வெளியீட்டை ஒன்றிய அரசு திட்டமிட்டுத் தடுத்தது.

பாலியல் குற்றவாளியுடன் ஒன்றிய அரசுக்கு இருந்த தொடர்பு குறித்த எப்ஸ்டீன் ஆவணங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் ஓடுவது ஏன்? உண்மையை எதிர்கொள்ளப் பயந்து கொண்டு உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது பாஜக அரசின் வழக்கமாகிவிட்டது. ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்னைகளை விவாதிக்க விடாமல் தடுப்பது கண்டிக்கத்தக்கது’ என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், ஒரு புத்தகம் அல்லது இதழில் வெளிவந்த தகவலை மேற்கோள் காட்டிப் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து அவை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. இன்று மதியம் இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம் அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இருந்தும் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்கட்சி எம்பிக்கள் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.