‘‘குக்கர்காரர் என்டிஏ கூட்டணியில் இணைந்ததால் தலைமை மீது அதிருப்தியில் இருக்காங்களாமே இலைக்கட்சி முக்கிய நிர்வாகிகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியுடனான கூட்டணியில் குக்கர் கட்சி இணைந்த பிறகு மலைக்கோட்டை இலை கட்சி நிர்வாகிகள் அமைதியாக இருந்து வருகிறார்களாம்... குக்கர் தலைமையானவர் பற்றி எப்படி தலைமைக்கு சொல்வது என்று தெரியாமல், அவர்களுக்குள் புலம்பி வருகிறார்களாம்.. இந்த தகவல் தெரிய வந்த குக்கர் கட்சி நிர்வாகிகள், இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்திருக்காங்களாம்.. குக்கர் கட்சி நிர்வாகிகளின் இந்த மகிழ்ச்சி இலை கட்சியினருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தி இருக்காம்.. தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கும் மலைக்கோட்டையை சேர்ந்த இலைக்கட்சி முக்கிய நிர்வாகிகள் விரைவில் தலைமையை நேரில் சந்தித்து தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்த போறாங்களாம்.. இந்த டாப்பிக்கை தான் மலைக்கோட்டை மாவட்டம் முழுவதும் அரசல்புரசலாக பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாங்கனி மாவட்டத்தில் நிழலானவர் கொடுத்த பட்டியலை ஒதுக்கிட்டு, புது முகங்களுக்கும், மாஜி அமைச்சருக்கும் வாய்ப்பு கொடுக்கப் போறாராமே சேலத்துக்காரர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்டத்தில 11 சட்டமன்ற தொகுதிகள் இருக்கு.. இலை கட்சியின் விவிஐபி நிழலா இருப்பவர் யாரை கைகாட்டி சொல்கிறாரோ அவருக்கே சீட் கிடைத்து வந்ததாம்.. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஆத்தூர், ஏற்காடு, கெங்கவல்லி, வீரபாண்டி, ஓமலூர் ஆகிய தொகுதியில் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு அவர் சீட் வாங்கி கொடுத்திட்டாராம்.. இந்த தடவையும் அவர் களத்தில இறங்கி ஒரு பட்டியல் கொடுத்துள்ளாராம்.. அவங்களுக்கு எப்படியும் சீட் வாங்கி கொடுக்கிற முயற்சியில தீவிரமா செயல்பட்டு வருகிறாராம்.. ஆனால், விவிஐபியோ இந்த பட்டியல கண்டுகொள்ளவில்லையாம்.. விவிஐபி தனது சொந்த மாவட்டத்தில ஒரு பட்டியலை தயாரித்து வைத்துட்டாராம்.. விவிஐபி நிற்கும் எடப்பாடியை தவிர மற்ற சட்டமன்ற தொகுதிகளுக்கு புதுமுகங்களுக்கும், சங்ககிரி தொகுதியில் மாஜி அமைச்சருக்கும் வாய்ப்பு இருக்குதாம்.. இதனால் விவிஐபியின் நிழல் என்ன செய்வது என்று தெரியாம தவிக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேர்தலில் சீட் என்ற கோரிக்கை என்னாச்சுனு உடன் சென்ற மாஜி பெண் எம்பி செங்ஸ்க்கு நெருக்கடி கொடுத்து வருகிறாராமே..’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியில் இருந்த செங்ஸ் நடிகர் கட்சிக்கு தாவிய போது உடன் வந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.. அதில் குறிப்பிடும்படியான நபராக இருந்தவர் சத்தியத்திற்கு பெயர் போன மாஜி பெண் எம்பி மட்டுமே.. எப்போதும் செங்ஸ் நிழலாக இருந்து வரும் அந்த பெண், நடிகர் கட்சிக்கு வந்தால் எலக்சனில் சீட் என்பதை உறுதி செய்து கொடுக்க வேண்டும் என்று கண்டிசன் போட்டு இருந்தாராம்.. இதற்கு செங்ஸ் ஓகே சொன்னதால் தான் நடிகர் கட்சிக்கு அவர் வந்தாராம்.. ஆனா கட்சி தாவி பல மாதமாகியும் இந்த கோரிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சீட் உத்தரவாதம் என்னாச்சு என்று செங்ஸ்க்கு நெருக்கடி கொடுக்க தொடங்கி உள்ளாராம்.. தற்போதைய சூழலில் தனக்கே என்ன என்று தெரியாத நிலை இருப்பதால் எல்லாவற்றிக்கும் காலம்தான் பதில் சொல்லும் என்ற வழக்கமான டயலாக்கை சொல்லி செங்ஸ் சமாதானப்படுத்தி வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நிம்மதி பெருமூச்சில் இருக்காங்களாமே யூனியன் சிட்டிங் எம்எல்ஏக்கள்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சின்னஞ்சிறிய மாநிலமான புதுவையில் மலராத கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க புல்லட்சாமி தயாராகி வருகிறாராம்.. அவரது முக்கியமான கோரிக்கைய லாட்டரி அதிபர் மகனின் கட்சிக்கு செக் வைக்க வேண்டும் என்பது தான்.. உள்துறை பவுர்புல் மேனும் லாட்டரி அதிபரையும், அவரது மகனையும் நேரில் அழைத்து சிபிஐ வழக்குகளை கூறி மிரட்டி உள்ளாராம்.. அப்போது கட்சியை கலைக்கணும் இல்லையென்றால், இரண்டு சீட் தருகிறோம், மலராத கட்சி கூட்டணியில் சேரணும் என்றனராம்.. அதற்கு இருவரும் ஒத்துக்கொண்டனராம்.. தொடர்ந்து புல்லட்சாமியை நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றாராம்.. இதற்கிடையில் லாட்டரி அதிபர் மகனிடம் அதிகமாக இருக்கும் பணத்தை நம்பி தேர்தலில் நின்றால் வெற்றி பெற்று விடலாம் என கணக்கு போட்ட என்.ஆர்.காங்கிரஸ், கதர் கட்சியின் பிரபலங்கள் லாட்டரி அதிபர் மகன் கட்சியில் இணைந்தனர். இதற்கும் ஒருபடி மேலே சிட்டிங் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள், இந்த ஆட்சியில் சம்பாதிக்க முடியவில்லை. மீண்டும் தேர்தலில் நிற்க வேண்டும் என்றால் பணம் தேவை என்பதால் லாட்டரி அதிபர் மகன் கட்சியில் துண்டு போட்டு வைத்து இருந்தார்களாம்.. தற்போது மலராத கட்சி கூட்டணியில் இரண்டு சீட்டுகள் என்பது உறுதி ஆனதால் அதிர்ச்சி அடைந்த இணைந்த பிரபலங்கள் திரிசங்கு நிலையில் தவிக்கின்றனராம்.. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட மாதிரி ஆகிவிட்டதே என தொகுதி மக்கள், அவர்களை கலாய்க்கின்றனராம்.. ஆனால் சிட்டிங் எம்எல்ஏக்கள், நாம தப்பிச்சிவிட்டோம் என நிம்மதி பெருமூச்சு விடுறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தொகுதிப் பங்கீட்டு சமயத்தில் தூங்கா நகரில் பெரிய பிரச்னை ஏற்படும்னு சொல்றாங்களே.. நிஜந்தானா..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘உண்மையே தான்.. தூங்கா நகர் தொகுதிகளில் போட்டியிடும் கனவில் இருந்த இலைக்கட்சி நிர்வாகிகள் சிலர், தற்போது மலராத கட்சியுடன் கூட்டணி வைத்ததால், கலக்கத்தில் இருக்கின்றனர். தாங்கள் போட்டியிட திட்டமிட்டுள்ள தொகுதிகளைத்தான் மலராத கட்சியினர் குறி வைத்துக் கேட்டு வருகின்றனராம்... தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவான செல்லமானவரின் தொகுதி முதல் படை வீடான குன்றம். இத்தொகுதியை தங்களுக்கே தந்தாக வேண்டுமென மலராத கட்சி கேட்டு வருகிறது. இதை முன் வைத்தே முதல் படை வீட்டு விவகாரத்தில் சம்பந்தமே இல்லாமல் சில போராட்டங்களையும் முன்னெடுத்தது. இதுபோதாதென்று டாக்டரானவர் போட்டியிட திட்டமிட்டுள்ள வடபுறத்தொகுதியையும் கேட்டு வருவது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை தொகுதி மாறி வடபுறம் நகரலாமென திட்டமிட்டிருந்த தெர்மோகோல்காரருக்கும் இதனால் மிரண்டு போய் காணப்படுகிறார். சேலத்துக்காரரானவர் வேஸ்ட் லக்கேஜாக மலராத கட்சியுடனான கூட்டணியை வைத்து, தூங்கா நகரத்தின் இலைக்கட்சியினருக்கு மன உளைச்சலையே அதிகரிக்கச் செய்திருக்கிறாரென தொண்டர்களுடன், நிர்வாகிகளும் காதுபட பேசி வருகிறார்கள். இதன் எதிரொலியாக தொகுதிப் பங்கீடின்போது தூங்காநகரத்தில் பெரும் பிரச்னை வெடிக்குமென கூறுகின்றனர் இலைக்கட்சியின் மூத்த நிர்வாகிகள்...’’ என்றார் விக்கியானந்தா.



