அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரிக்கு பதிலடியாக அமெரிக்காவின் 700 பொருட்களுக்கு 50% வரை வரியை உயர்த்தியது கனடா: செப்.8ல் அமலுக்கு வரும் என அறிவிப்பு
டொராண்டோ: அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 700 பொருட்களுக்கு 50 சதவீதம் வரையிலும் வரியை உயர்த்தி கனடா பதிலடி கொடுத்துள்ளது. இந்த வரி உயர்வு வரும் செப்டம்பர் 8ம் தேதி அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது. நீண்ட கால நட்பு நாடுகளாக இருந்த அமெரிக்கா-கனடா இடையே வர்த்தக மோதல் வெடித்துள்ளது. கடந்த வாரம் நடந்த இறுதிகட்ட இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, கனடா பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது.
மேலும் கனடா ஒத்துப்போகாவிட்டால் தற்போதுள்ள வரிகளை விட மோசமான விளைவுகளை சந்திக்க நேரிலும் என்றும் கனடா வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் எஃகு மீது புதிய 50 சதவீத வரிகளை விதிப்பதாகவும் அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இதன் மூலம் கனடாவை அடிபணிய வைக்க அமெரிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய கனடா பிரதமர் மார்க் கார்னி, டிரம்பின் மிரட்டல்கள் கனடாவின் முக்கிய தொழில்களை அழிக்க விரும்புவதை காட்டுவதாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடியாக எஃகு, பால் பொருட்கள், வீட்டு உபகரணங்கள் மற்றும் விவசாய சாதனங்கள் உட்பட 20 பில்லியன் டாலர் மதிப்புகள்ள 700 அமெரிக்க பொருட்களுக்கு 15, 25, 50 சதவீதம் என 3 விகிதங்களில் வரியை உயர்த்தி கனடா நேற்று பதிலடி கொடுத்துள்ளது. இந்த கூடுதல் வரி வரும் செப்டம்பர் 8ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல அமெரிக்கப் பொருட்கள் மீதான வரி 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, எஃகு மற்றும் அலுமினியப் பொருட்கள், மரச்சாமான்கள் மற்றும் ஆடைகள் ஆகியவை 50 சதவீத வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏற்கனவே கனடா 25 சதவீத வரியை விதித்ததிலிருந்து அமெரிக்க எஃகு இறக்குமதி 30 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது 50 சதவீத வரி விகிதம் அதை மேலும் குறைக்கும் என்று கனடா அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வரிவிதிப்பின் நோக்கம், வருவாயை அதிகரிப்பது அல்ல, மாறாக கனடா நிறுவனங்களைப் பாதுகாப்பதும், அமெரிக்க இறக்குமதிகளைக் குறைப்பதுமே என கனடா அதிகாரிகள் கூறி உள்ளனர்.



