Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் பிரேம்குமார் தொடர்புடைய 10க்கு மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் பிரேம்குமார் தொடர்புடைய 10க்கு மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், பி.எல்.எம் (BLM) நிறுவனத்தின் தலைவருமான பிரேம்குமாரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சுமார் 5,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், கடந்த வாரம் பிரேம்குமாரை கோழிக்கோடு குற்றப்பிரிவு போலீசார் சென்னையின் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக அவர் கோழிக்கோடு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்குள்ள நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் இந்தச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதலே சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரேம்குமாரின் இல்லம், கோயம்பேட்டில் உள்ள அவரது டிராவல்ஸ் (Travels) அலுவலகம் மற்றும் வானகரம், திருமங்கலம், கொளத்தூர் ஆகிய இடங்களில் உள்ள பி.எல்.எம் நிறுவன அலுவலகங்கள் என 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நீடித்து வருகிறது.

இந்தச் சோதனையில், துணை ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை முடிவிலேயே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரூ.5,000 கோடி மோசடி எதுவும் நடைபெறவில்லை. இங்கு ஏற்கனவே பணியாற்றிய நவீன் என்பவர், நிறுவனத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பணியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் கொடுத்த பொய் புகாரின் அடிப்படையில்தான் கோழிக்கோடு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்; அதன் தொடர்ச்சியாகவே தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று வழக்கறிஞர் பிரேம்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பிரேம்குமார் தொடர்புடைய நிறுவனங்களில் தீவிரமாகச் சோதனை நடைபெற்று வருகிறது. இந்தச் சோதனை முடிவிலேயே சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறதா, வேறு எந்த வழிகளில் எல்லாம் பணப் பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன உள்ளிட்ட விவரங்கள் தெளிவாகத் தெரியும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.