Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரசாந்த் கிஷோர் ஆதரவாளர் பலி பாட்னா எஸ்பி நீக்கம்: 3 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை தேர்தல் ஆணையம் அதிரடி

பாட்னா: பிரசாந்த் கிஷோர் ஆதரவாளர் பலியான விவகாரத்தில் பாட்னா எஸ்பியை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பாட்னாவின் மொகாமா பகுதியில் வியாழக்கிழமை பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர் பியூஷ் பிரியதர்ஷிக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது அவரது ஆதரவாளர் துலர்சந்த்யாதவ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் பலியானார். இந்த நிலையில் பிரேதபரிசோதனை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

அதில் துலர் சந்த் யாதவ் இதயம் மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட காயம், அதிர்ச்சி காரணமாக சுவாசக் கோளாறு ஏற்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடினமான மற்றும் மழுங்கிய பொருளால் இதயம் மற்றும் நுரையீரலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் துப்பாக்கிச்சூடு அவரது மூட்டுக்கு அருகில் தான் உள்ளது. துப்பாக்கிச் சூட்டு காயம் அவரது மரணத்திற்குக் காரணம் அல்ல என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மூன்று எப்.ஐ.ஆர் பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 2 போலீஸ் நிலைய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே மொகாமாவில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து பாட்னா காவல் கண்காணிப்பாளர் (புறநகர்) விக்ரம் சிஹாக்கை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. அவருக்குப் பதிலாக மாற்று அதிகாரியை நியமிப்பதற்கான அதிகாரிகள் குழுவை அவசரமாக நியமிக்க மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், மொகாமா துணைப்பிரிவு அதிகாரி மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி சந்தன் குமார், துணைப்பிரிவு காவல் அதிகாரி (பார்-1) ராகேஷ் குமார் மற்றும் அபிஷேக் சிங் ஆகியோரை மாற்றவும் உத்தரவிட்டது. ஆணையம் மூவருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. மேலும் அபிஷேக் சிங்கை உடனடியாக இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டது. இன்று மதியம் 12 மணிக்குள் இதுதொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.