Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிகார சென்டிமென்ட்: ஸ்பீக்கர்களின் வாரிசுகள் டிஷ்யூம்... டிஷ்யூம்... சவுண்டு விடுவாரா சரோஜா?

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தின் பரபரப்பான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று ராசிபுரம். இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் அமைச்சர், சபாநாயகராகும் வாய்ப்பையும் பெற்று வருகின்றனர். இந்த சென்டிமென்டால் அதிமுக கூட்டணியில் தொகுதியை பிடிக்க, மாஜிக்கள் பலர் மல்லுக்கட்டி வருகின்றனர். இதில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரத்தில் மீண்டும் போட்டியிடப் போவது யார்? என்ற விவாதம் இப்போதே அனல் பறக்கிறது. 1952ல் உருவான ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் முதல் இரண்டு வெற்றிகளை காங்கிரஸ் பதிவு செய்தது.

இதற்கடுத்து 1962ல் எஸ்.பி.செங்கோட்டுவேல் (திமுக), 1967ல் பி.பெரியசாமி (திமுக), 1971ல் ஆர்.நைனாமலை (திமுக) என்று தொடர்ச்சியாக திமுக வெற்றியை தக்க வைத்தது. 1977 மற்றும் 1980, 1984ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.துரைசாமியும், கே.பி.ராமலிங்கமும் வெற்றி பெற்றனர். 1989ல் திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.சுப்பு, 1991ல் அதிமுக கே.பழனியம்மாள், 1996, 2001ல் திமுக பி.ஆர்.சுந்தரம், 2006ல் திமுக கே.பி.ராமசுவாமி ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்தநிலையில் 2011 முதல் இந்த தொகுதியில் சென்டிமென்ட் கண்ணோட்டம் மாறியது. 2011ல் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பி.தனபால் சபாநாயகராக பொறுப்பேற்றார். 2016ல் வெற்றி பெற்ற சரோஜா அமைச்சரானார். 2021ல் திமுக சார்பில் வெற்றி பெற்ற மதிவேந்தனும் தற்போது அமைச்சராக உள்ளார்.

இதனால் சென்டிமென்டாக ராசியான தொகுதி என்ற பெயரையும் ராசிபுரம் பெற்றுள்ளது. இந்த கண்ணோட்டத்திலும் அதிமுக கூட்டணியில் தொகுதியை பிடிப்பதற்கு முட்டல் மோதல் ஆரம்பமாகியுள்ளது. அதில், அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களான தனபாலின் வாரிசும், முன்னாள் அமைச்சர் சரோஜாவும் மீண்டும் சீட் பெற்று விட வேண்டும் என மல்லுக்கட்டில் இறங்கியுள்ளனர். இதற்காக கடந்த முறை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தபோது ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து செலவுகளையும் முன்னாள் அமைச்சர் சரோஜாவே கவனித்தார். ஆனால் சமீபகாலமாக சரோஜா சைலண்ட் மோடில் உள்ளார்.

இதற்கு அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் சபாநாயகர் பி.தனபால், பாஜ சார்பில் போட்டியிட முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி ஆகியோர் தங்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்டு குடைச்சல் கொடுத்து வருவது தான் காரணமாக உள்ளது. அதிமுகவில் அமைச்சர், சபாநாயகர் என்று பதவிகளை வகித்த தனபால், இந்த முறை தனது மகன் லோகேஷ் தமிழ்செல்வனுக்கு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்து வருகிறார். அதேநேரத்தில் தமிழக பாஜவின் மாநில துணைத்தலைவராக இருப்பவர் ராசிபுரத்தை சேர்ந்த வி.பி.துரைசாமி. இவரும் தமிழக சட்டமன்ற துணைசபாநாயகராக பொறுப்பு வகித்தவர்.

இவர் தனது மகன் பிரேம்குமாருக்கு கட்டாயம் சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் ஆரம்பம் முதலே குறியாக உள்ளார். இப்படி இரண்டு மாஜி ஸ்பீக்கர்களுக்கு மத்தியில் முட்டிமோதுவது பலனில்லாமல் போய்விடும் என்பதால் மாஜி அமைச்சர் சரோஜா தற்போது சைலண்ட் மோடில் உள்ளார். குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அபூர்வமாக வந்து போகிறார். ஆனாலும் ராசியான ராசிபுரம் தொகுதி அதிமுகவிற்கு தான் கிடைக்கும் என்று கட்சியினர் ஆரூடம் கூறி வருகிறார்கள். இந்த ஆரூடம் கூட்டணியில் இருக்கும் பாஜ மேலிட வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது தனிடிராக்.