தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பிறகு மாநிலம் முழுவதும் மின்வெட்டு பிரச்னை தலைதூக்கியுள்ளது. கோடை காலம் என்பதால் மின்விசிறி, குளிர்சாதன வசதி இல்லாமல் இரவில் மக்கள் நிம்மதியாக தூங்க முடியாது. சமையல் முதல் தண்ணீர் தேவை வரை அனைத்துக்கும் மின்சாரத்தை மக்கள் நம்பி உள்ளனர். இந்நிலையில் தவெக தனது தேர்தல் அறிக்கையில் 200 யூனிட் மின்சாரம் இலவசம் எ்ன்று வா்க்குறுதி அளித்தது. தேர்தலில் வெற்றி பெற்றவுடன் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.
ஆனால் தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு என்று ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதை கண்டித்து முதலமைச்சர் வீட்டு முன்பே போராட்டம் நடத்தி உள்ளனர். 200 யூனிட் இலவச மின்சாரம் முக்கியமா? அல்லது இடையூறு இல்லாத மின்சார சேவை முக்கியமா என்று மக்கள் சிந்திக்க வேண்டும். இப்படி சாத்தியமில்லாத இலவச திட்டங்களை தேர்தலுக்கு முன்பு அறிவித்துவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் மக்களை சிரமப்படுத்த தான் முடியும்.
விவசாய கடன் தள்ளுபடி என்று அறிவித்துவிட்டு ரூ.50 ஆயிரம் வரை உள்ள சிறு, குறு விவசாய கடன் மட்டுமே தள்ளுபடி என்று அரசு அறிவிக்கிறது. இப்படி சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்ற அரசாக தான் தவெக அரசு விளங்குகிறது. அரசு தரும் 200 யூனிட் இலவச மின்சாரம் கூட வேண்டாம் மின்வெட்டு ஏற்படுத்தாமல், இடையூறு இன்றி மின்வினியோகம் தந்தாலே ேபாதும் என்ற மன நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். திரைப்படங்களில் வசனம் பேசுவது போல் தேர்தல் பிரசாரத்தில் வானத்தை வளைத்துவிடுவதாக கூறினார்கள்.
ஆனால் பொறுப்பில் அமர்ந்தவுடன் தான் ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்றுவது எவ்வளவு கடினம் என்பதை உணர்கிறார்கள். முந்தைய அரசை எளிதாக குற்றம்சாட்டி, குறை கூறியவர்கள் தற்போது ஆட்சியில் அமர்ந்தவுடன் இலவச திட்டங்களை நிறைவேற்றுவது கடினம் என்று புலம்புகிறார்கள். அடுத்ததாக தவெக ஆட்சிக்கு ஒரு தலைவலி இருக்கிறது. முந்தைய திமுக அரசு நகரப்பேருந்துகளில் மட்டுமே மகளிருக்கு இலவசம் என்று நடைமுறைபடுத்தியது. ஆனால் தவெக தனது தேர்தல் அறிக்கையில் மாநிலம் முழுவதும் மகளிருக்கு இலவச பஸ் பயணம் என்று அறிவித்துள்ளது.
ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் இவ்வாறு அறிவித்து நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம், நிலுவை தொகை வழங்கமுடியாமல் உள்ளது. இதனால் பஸ்களின் எண்ணிக்கையை குறைத்து மக்கள் சுலபமாக பஸ்களில் பயணம் செய்ய முடியாத நிலையை உருவாக்கிவிட்டது. தற்போது மக்கள் சொந்த வாகனம் அல்லது வாடகை வாகனங்களை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
இதே நிலை தான் தமிழ்நாட்டிலும் உருவாகும். பஸ்களின் எண்ணிக்கை குறையும். 3 வாகனங்களில் ஏற்ற வேண்டிய கூட்டத்தை இலவசம் என்ற பெயரில் ஒரு பஸ்சில் ஏற்றுவார்கள். இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாவார்கள் என்பது உறுதி. நமது வாக்குரிமை என்பது மிகப்பெரிய ஆயுதம். நாம் வாக்களிக்கும் போது அனைத்து கோணங்களிலும் சிந்தித்து சரியானவர்களை தேர்ந்தெடுத்தால் மட்டுமே நாடு வளர்ச்சி பாதையில் பயணிக்கும்.
