Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பெரியபாளையம் அருகே 8 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே 8 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் அக்கரப்பாக்கம், திருநிலை, பனையஞ்சேரி ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் விவசாயிகள், வியாபாரிகள், என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த 3 கிராமங்களுக்கும் கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த கிராமங்களுக்கு நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு திடீரென மின்சாரம் நிறுத்தப்பட்டது. இரவு வரை மின்சாரம் வராததால் அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு போனில் தொடர்பு கொண்டனர்.

ஆனால் யாரும் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இரவு 10.30 மணிக்கு கன்னிகைப்பேரில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது மின்வாரிய அலுவலகம் பூட்டியிருந்ததால் ஆத்திரமடைந்த மக்கள் மின்வாரிய அலுவலகம் எதிரில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர். ஆனால் மக்கள் மின்சாரம் வந்தால் தான் இங்கிருந்து செல்வோம் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போலீசார் மின்வாரிய அதிகாரியிடம் போனில் தொடர்பு கொண்டு, எப்போது மின்சாரம் வரும் என கேட்டனர். சிறிது நேரத்தில் மின்சாரம் வந்து விடும் என அதிகாரிகள் கூறியதால் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் இரவு 11 மணிக்கு அப்பகுதிக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. 8 மணிநேர மின்தடை ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

எர்ணாவூரில் 4 மணி நேரம் மின்வெட்டு

திருவொற்றியூர் அருகே எர்ணாவூர் பகுதியில் உள்ள ஜோதி நகர், முருகப்பா நகர் அம்பேத்கர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக மேற்கண்ட பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஜோதிநகர் பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் ஜோதி நகர் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். ஆனால் 11 மணி ஆகியும் மின்சாரம் வரவில்லை.

இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் வெளியே வந்து அமர்ந்து எப்பொழுது மின்சாரம் வரும் என காத்திருந்தனர். ஆனால் மின்சாரம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஜோதி நகர் அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சாத்தாங்காடு போலீசார் சமாதானம் பேசினர். ஆனால் கரண்ட் வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என கூறி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மின்சாரம் வந்ததையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.