முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு விடைக்குறிப்புகளை வெளியிடுவதில் தயக்கம் ஏன்..? தேசிய தேர்வு வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
புதுடெல்லி: முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வின் அசல் வினாத்தாள்கள் மற்றும் விடைக் குறிப்புகளை முழுமையாக வெளியிட மறுப்பது ஏன் என்று தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய விடைக்குறிப்புகளை வெளியிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
நாடு முழுவதிலும் உள்ள நிபுணர்களைக் கொண்டு இந்த வினாக்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கேள்விகளை முழுமையாக வெளியிட்டால், அடுத்த 5-6 ஆண்டுகளில் அனைத்து கேள்விகளும் வெளியாகிவிடும் என்றும், இது தேர்வின் தரத்தைப் பாதிக்கும் என்றும் தேர்வாணையம் தரப்பில் வாதிடப்பட்டது. தேர்வாணையத்தின் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி நரசிம்மா, ”அப்படியென்றால் தேர்வின் வெளிப்படைத்தன்மை என்னாகும்? நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதற்கு இன்னும் விரிவான விளக்கம் தேவை. மற்ற தேர்வுகளில் இருந்து நீங்கள் எந்த வகையில் மாறுபடுகிறீர்கள் என்பதை விளக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்கள் ஏற்கனவே இணையதளங்களில் விற்கப்படுகின்றன. அவ்வாறு இருக்கும்போது வினாக்களை வெளியிட தேர்வாணையம் ஏன் தயங்குகிறது?” என்று வாதிட்டார். . இது குறித்து தேசியத் தேர்வாணையம் எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.


