Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போராடி வென்றது போர்ச்சுகல்

டொரான்டோ அரங்கில் நடந்த ரவுண்ட் ஆப் 32 போட்டியில் குரோஷியா அணியுடன் மோதிய போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்று காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு முன்னேறியது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போடாததால் இடைவேளையின்போது 0-0 என சமநிலை வகித்தன. இரண்டாவது பாதி ஆட்டத்தில் குரோஷியா வீரர் இவான் பெரிசிச் 53வது நிமிடத்தில் கோல் அடிக்க, அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்த சில நிமிடங்களில் ரொனால்டோ கோல் அடித்தாலும் அது ஆஃப் சைடு ஆக நிராகரிக்கப்பட்டது. எனினும், 68வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் அவர் கோல் அடிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது. உலக கோப்பை நாக் அவுட் சுற்று போட்டியில் ரொனால்டோ கோல் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.

இன்ஜுரி டைம் கடைசி தருணத்தில் கான்கலோ ராமோஸ் (90’+4’) ஒரு கோல் அடிக்க, போர்ச்சுகல் 2-1 என முன்னிலை பெற்றது. குரோஷியா தரப்பில் கடைசி விநாடிகளில் அடிக்கப்பட்ட கோல் வீடியோ நடுவர் உதவியுடன் மறுக்கப்பட, போர்ச்சுகல் வெற்றிக் கனியை தட்டிப் பறித்து ரவுண்ட் ஆப் 16ல் கால் வைத்தது. இந்த போட்டியின் 81வது நிமிடத்தில் ரொனால்டோ வெளியே அழைக்கப்பட்டு, மாற்று வீரராக ரூபன் நெவஸ் களமிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பெனால்டி வாய்ப்பில் ரொனால்டோ கோல் அடித்தாலும், சக வீரர்களின் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொண்டு ஒருங்கிணைந்து விளையாடத் தவறுவதாக அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. அவரால் ஒரு முறை கூட பந்துடன் குரோஷியா கோல் பகுதிக்குள் ஊடுருவிச் செல்ல முடியவில்லை.

போர்ச்சுகல் அணி காலிறுதிக்கு முந்தய சுற்றில் ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின் அணியுடன் மோத உள்ளதால், ரொனால்டோ அந்த போட்டியில் விளையாடுவதே கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கிடையே அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ரொனால்டோவின் சகோதரி தகவல் பதிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.எனினும் ரொனால்டோ அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஸ்பெயின் போர்ச்சுகல் போட்டி ஜூலை 7ம் தேதி டாலஸ் அரங்கில் நள்ளிரவு 12.30க்கு தொடங்கி நடைபெறும்.

ரசிகர்கள் ரகளை

குரோஷியா அணி தரப்பில் கடைசி விநாடிகளில் அடிக்கப்பட்ட கோல் விஏஆர் உதவியுடன் மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அந்த அணியின் ரசிகர்கள், போட்டி முடிந்ததும் தண்ணீர் பாட்டில், குளிர்பான கேன் உள்பட கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் மைதானத்துக்குள் வீசி எறிந்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால் டொரான்டோ அரங்க மைதானமே பெரிய குப்பை தொட்டியாக மாறியது. அடிடாஸ் பந்துக்குள் இருக்கும் டிரையோண்டா மைக்ரோ சிப் தான் ஆப் சைடை துல்லியமாகக் கணிக்க உதவியது குறிப்பிடத்தக்கது.