ஆபாச வீடியோக்கள் அனுப்பி டார்ச்சர் 2 பெண் பேராசிரியர்கள் பாலியல் தொல்லையால் மாணவன் தற்கொலை: சக மாணவர்கள் போராட்டம்
திருமலை: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சாய் தேஜா(21). எம்விபி காலனியில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சாய் தேஜா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் சாய் தேஜாவின் மரணச் செய்தியைக் கேட்டதும், அவரது நண்பர்கள் மற்றும் மாணவர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். அப்போது, மாணவரின் பெற்றோரிடம் சாய் தேஜாவை 2 பெண் பேராசிரியர்கள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தனர்.
அவர்களின் துன்புறுத்தலால் மனமுடைந்த சாய் தேஜா தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார். அதனடிப்படையில் சாய் தேஜாவின் செல்போனை கைப்பற்றிய போலீசார் வாட்ஸ்அப் மூலம் நடந்த சாட்டிங்கை ஆய்வு செய்தனர். அதில் 2 பெண் பேராசிரியர்கள் ஆபாச வீடியோ, ஆடியோ அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், கடந்த சில நாட்களாக இந்த துன்புறுத்தல் அதிகரித்து வந்ததால் சாய் தேஜா தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதற்கிடையில் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் 2 பெண் பேராசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.