2031ல்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பே நடக்கும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது எப்போது?: திருமாவளவன் கேள்வி
அவனியாபுரம்: சென்னையில் இருந்து மதுரை வந்த விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என, ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அது எப்போது நடைபெறும் என்பதை கூறவில்லை.
ஒன்றிய பாஜ அரசின் பதவிக்காலம் 2029ல் முடிகிறது. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021ல் நடந்திருக்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிறகே அது நடக்கும் என்றால், 2031 அதற்கான காலமாக உள்ளது. ஆனால் அப்போது பாஜ ஆட்சியில் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ராகுல்காந்தி மட்டுமின்றி, இந்தியா கூட்டணியில் உள்ள அனைவரும் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது சட்டசபை தேர்தல் ஆதாயம் கருதி இந்த அறிவிப்பை ஒன்றிய பாஜ அரசு வெளியிட்டுள்ளது. இருப்பினும், இதுவரை எதிர் நிலைப்பாட்டில் இருந்த அவர்கள் தற்போது நமது கருத்தை ஏற்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது.
தமிழத்தில் சில கட்சிகள் சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டும் என்கின்றனர். ஆனால் அரசிலமைப்புச் சட்டப்படி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு மட்டுமே இருக்கிறது. தமிழ்நாட்டில் வரும் ஜூன் 30ம் தேதி மதசார்பின்மைக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் பாஜ அரசை கண்டித்தும், வக்பு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், விசிக சார்பில் திருச்சியில் மாபெரும் பேரணி நடத்தப்படும். இவ்வாறு கூறினார்.
