Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் சா.மு.நாசர், இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ பங்கேற்பு

சென்னை: போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், பரிவோடும், முற்போக்கு கொள்கைகளோடும் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்தி, பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான திருத்தந்தை போப் பிரான்சிஸ் மறைவு குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்ததாகத் தெரிவித்திருந்தார். அதோடு, இன்று (நேற்று) தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ்.இருதயராஜ் ஆகியோர் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.