சட்டவிரோத குடியேறிகளின் கைது நடவடிக்கையை பாப் பாடகியின் ஆபாச பாடலுடன் ஒப்பிடுவதா?.. வெள்ளை மாளிகை வீடியோவால் சர்ச்சை
வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி சப்ரினா கார்பெண்டர் நடத்திய இசை நிகழ்ச்சிகளின் போது, ரசிகர்களை விளையாட்டாகக் கைது செய்வது போன்று கைவிலங்கு மாட்டி பாடலைப் பாடுவது வழக்கம். பாலியல் தொடர்பான வரிகள் இடம்பெற்றுள்ள இந்தப் பாடல் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கனவே மற்றொரு பிரபல பாடகியான ஒலிவியா ரோட்ரிகோ, தனது பாடலை வெறுப்புப் பிரசாரத்திற்காகப் பயன்படுத்தியதாகக் கூறி அரசுத் துறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது சப்ரினாவின் பாடலை அமெரிக்க அதிபர் மாளிகை நிர்வாகம் முற்றிலும் மாறுபட்ட மற்றும் அதிர்ச்சியூட்டும் சூழலுக்குப் பயன்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் குடியேற்ற அமலாக்கத்துறையினர் (ஐசிஇ) கைது செய்யும் வீடியோ ஒன்றை வெள்ளை மாளிகை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவின் பின்னணியில் சப்ரினாவின் பாடல் ஒலிக்கவிடப்பட்டுள்ளது. கைது செய்யப்படும் நபர்கள் தரையில் அமரவைக்கப்படும் காட்சிகளுக்குப் பொருத்தமாக, ‘இதை நீங்கள் எப்போதாவது முயற்சி செய்து இருக்கிறீர்களா? பை-பை’ என்ற தலைப்புடன் அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. மிகவும் சோகமான ஒரு கைது நடவடிக்கையை, ஆபாச அர்த்தம் கொண்ட பாடலோடு ஒப்பிட்டு கிண்டல் செய்திருப்பதாக இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.