திருவனந்தபுரம்: கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோயில்களில் சக்குளத்துகாவு பகவதி அம்மன் கோயில் குறிப்பிடத்தக்கதாகும். இங்கு வருடம்தோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த வருட பொங்கல் விழா நாளை மறுநாள் (4ம் தேதி) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நடைபெறும் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத்தூண் உயர்த்தும் நிகழ்ச்சி கடந்த நவம்பர் 23ம் தேதி நடைபெற்றது. நாளை மறுநாள் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தொடங்கும். காலை 9 மணிக்கு பின்னர் கோயில் காரியதரிசி மணிக்குட்டன் நம்பூதிரி கோயில் அணையாவிளக்கில் இருந்து தீபத்தை எடுத்து கொடிவிளக்கில் ஏற்றுவார்.
தொடர்ந்து கோயில் பந்தலில் தனியாக அமைக்கப்படும் பொங்கல் அடுப்பில் சக்குளத்துகாவு கோயில் அறக்கட்டளை தலைவரும், முக்கிய காரியதரிசியுமான ராதாகிருஷ்ணன் நம்பூதிரி தீ மூட்டி பொங்கலிடும் நிகழ்வை தொடங்கி வைப்பார். காலை 11 மணிக்கு பொங்கல் நைவேத்யம் நடைபெறும். தொடர்ந்து மேற்குவங்க மாநில கவர்னர் ஆனந்தபோஸ் கார்த்திகை தூணில் தீபம் ஏற்றுவார். பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

