Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சுவாச பிரச்னையை ஏற்படுத்தும் பாலித்தீன் மறுசுழற்சி செய்யும் ஆலையை மூட வேண்டும்

*கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

திருப்பூர் : சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் பாலித்தீன் மறுசுழற்சி செய்யும் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன், தலைமையில் நேற்று நடந்தது. இதில், பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு மனுக்கள் அளித்தனர்.

அவிநாசி கருக்கம்பாளையம் பாலச்சந்திரன் அளித்த மனு: எனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் 3500 நேந்திர வாழைக்கன்றுகள் நட்டு பயிர் செய்து வந்தேன். தற்போது 13 மாதங்கள் ஆன நிலையில் வாழைகள் நன்கு குலை தள்ளிய நிலையில், இன்னும் 50 நாட்களில் அறுவடை செய்ய காத்திருந்தேன். இதற்காக நடுவச்சேரி கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.2 லட்சம் கடன் பெற்றிருந்தேன்.

கடந்த, 20ம் தேதி கோயிலுக்கு சென்றுவிட்டு தோட்டம் திரும்பிய போது, நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 200 வாழைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. வாழைகள் மின் கம்பிகளில் உரசுவதால், எங்களுக்கு எவ்வித தகவலும் இன்றி வாழைகளை வெட்டிவிட்டு மின்வாரிய ஊழியர்கள் சென்றுள்ளனர். இதனால், எங்களுக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக எங்களுக்கு தகவல் அளித்திருந்தால், வாழைகள் சேதம் அடையாத வகையில் அப்புறப்படுத்தி இருப்போம். எங்களது பட்டா நிலத்தில் 16 மின் கம்பங்கள் உள்ளன. இனி அவற்றை அப்புறப்படுத்தவும், வெட்டப்பட்ட வாழைகளுக்கு உரிய இழப்பீட்டை மாவட்ட கலெக்டர் பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

வெள்ளகோவில், மேட்டுப்பாளையம், நடுப்பாளையம் கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 15 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகிறோம். பாலித்தின் மறுசுழற்சி செய்யும் ஆலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. ஆலை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து கொடிய நச்சு வாயுக்கள் தொடர்ந்து வெளியேறி வருகிறது. காற்றின் தரம் மிகவும் மாசடைந்துள்ளது.

இது தொடர்பாக ஆலை நிர்வாகத்துக்கு பலமுறை கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. சுவாச நோய், புற்றுநோய் உட்பட பல்வேறு உபாதைகளை பலரும் சந்தித்துள்ளோம். பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆலை கீழ்பவானி ஆற்றில் அருகில் அமைந்திருப்பதால் ஆலைக்கு பயன்படாத ரசாயனம் மற்றும் பாலித்தீன் கழிவுகள் இரவு நேரங்களில் கால்வாய் நீரில் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசு ஏற்பட்டு குடிநீர் மூலம் பல்வேறு உடல் உபாதைகள் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்படுகிறது.

கடந்த காலங்களை தற்போது உற்பத்தி அதிகளவில் நடந்து வருவதால், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை சந்திக்கிறோம். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் உயிரையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும். திருப்பூர் மாநகராட்சி 5வது வார்டு திருக்குமரன் நகர் மற்றும் பாரதிநகர் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அளித்த மனு:

எங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் மத்திய, மாநில அரசின் மானியத்தில் ஏழை, எளிய மக்களுக்காகவும் மற்றும் மாற்றுத்தினாளிகளுக்காகவும் நொய்யல் ஆறு கரையோரத்தில் வசித்து வந்த மக்களுக்காகவும், வழங்கப்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு வீட்டுவரி சம்பந்தமாக, எந்த அறிவிப்பும் தெரிவிக்கவில்லை.

ஆனால் குடியிருப்பு பராமரிப்புத்தொகை என்ற பெயரில் மாதம் ரூ.250 வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அத்தனை குடியிருப்புவாசிகளுக்கும் ஆண்டு வீட்டுவரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதில், ஆண்டுக்கு ரூ.3073 கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பராமரிப்பானது சுமாராக இருப்பதால், எங்களுக்கு உண்டான வீட்டுவரியை பாதியாக குறைக்க வேண்டும்.

பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாமலை அளித்த மனு: திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் ஆங்கில எழுத்துக்கள் மட்டுமே எழுதப்பட்டும், தமிழ் வார்த்தைகள் புறக்கணிக்கப்படுகின்றன.

ஒரு சில பெயர் பலகைகளில் ஆங்கில எழுத்துக்கள் பெரியதாகவும், தமிழ் எழுத்துக்கள் ஒரு ஓரத்திலும் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் எழுதி வைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட மனு: வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த மாணவர்களுக்கு போதிய இட வசதி மற்றும் கழிவறை விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் போதுமானதாக இல்லை.

இதனால், இந்த பள்ளி பகுதியை பலவஞ்சிபாளையம் பகுதியில் காலியாக உள்ள இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இடம் கோயிலுக்கு சொந்தமான இடம் என்பதால் இந்து சமய அறநிலையத்துறையுடன் ஆலோசனை பெற்று, மாவட்ட நிர்வாகம் விரைவாக பள்ளியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் சரவணன் கொடுத்த மனு: நுகர்வோர் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தை நடத்த பதிவு செய்துள்ள அனைத்து நுகர்வோர் அமைப்புகளின் விபர பட்டியல்களை அனைத்து அரசு துறைகளுக்கும் அனுப்பி அரசாணைப்படியும், உயர் நீதிமன்ற தீர்ப்பின்படியும் மாவட்ட கலெக்டர் தலைமையிலும், மாவட்ட அளவில் ஒவ்வொரு துறை சார்ந்த தலைவர்களால் தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களுடனான காலாண்டு கூட்டங்கள் நடைபெறுவதை தொடர்ச்சியாக கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளை 630 மனுக்களை வருவாய் அதிகாரி பெற்றார்.