Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொள்ளாச்சியில் தொடர் மழை மஞ்சி, கொப்பரை உற்பத்தி பாதிப்பு

*ஏற்றுமதி குறைந்தது

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் மஞ்சி, கொப்பரை உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், ஏற்றுமதியும் குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுடி அதிகமாக உள்ளதால், சுற்றுட்டார கிராம பகுதிகளில் தென்னையை மையமாகக் கொண்டு 350க்கும் மேற்பட்ட மஞ்சி தொழிற்சாலைகள் செயல்படுகிறது. இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் மஞ்சி பொருட்கள் பல்வேறு வெளி மாநிலங்களுக்கும், பல்வேறு வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது மஞ்சி உற்பத்தி அதிகரிக்கிறது. இருப்பினும், பருவமழை காலங்களில் மஞ்சி உலர வைக்க முடியாமல், அந்நேரங்களில் அதிகளவு உற்பத்தி பாதிக்கப்படும். இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து சில மாதமாக வெயிலின் தாக்கத்தால், அந்நேரத்தில் பகல் மற்றும் இரவு நேரத்திலும் மஞ்சி உலர வைக்கும் பணி நடைபெற்றது. நாளொன்றுக்கு சுமார் 1000டன் மஞ்சி உற்பத்தி செய்யப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில், கடந்த மாதம் இறுதியில் பருவமழை பெய்ய துவங்கியது. பின் ஒருசில வாரங்கள் மழையின்றி இருந்தாலும், கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு மீண்டும் பருவமழை துவங்கி, தொடர்ந்து வருகிறது.

சிலநாட்களாக பகல், இரவு என இடைவிடாமல் பெய்த மழையால், பெரும்பாலான தொழிற்சாலைகளிலும் மஞ்சி உலர வைக்க முடியாமல் விவசாயிகள், உற்பத்தியாளர்கள் தவித்தனர். அடிக்கடி பெய்யும் மழையால், மஞ்சி நனைந்தவாறு உள்ளது.

தற்போது பகல் மற்றும் இரவு என தொடர்ந்து இடைவிடாமல் பெய்யும் பருவமழையால், ஒருசில தொழிற்சாலைகளில் மட்டும், மஞ்சி உற்பத்தி மிகவும் குறைவாக நடப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலான தொழிற்சாலைகளில் மஞ்சி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு, தினமும் 30சதவீத மஞ்சியே உற்பத்தி செய்யப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பப்படுவதாக, உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.இதேபோல் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த கோடை காலத்தின்போது கொப்பரை உலர வைக்கும் பணி அதிகளவு இருந்தது, பிப்ரவரி மாதம் துவக்கத்திலிருந்து மே மாதம் துவக்கம் வரை நாளொன்றுக்கு சுமார் 600 டன் வரையிலான கொப்பரை உலர வைக்கப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனால், தற்போது தென்மேற்கு பருவமழை அடிக்கடி பெய்வதால், கொப்பரை உலர வைப்பது குறைந்துள்ளது. தொழிற்சாலைகளில் உள்ள குடோன்களில் கொப்பரை உலர வைக்கும் பணி நடைபெற்றதாலும், ஈரப்பதம் பல நாட்களாக இருந்துகொண்டே இருப்பதால், கொப்பரை உலர வைக்கும் பணி பாதிக்கப்படுகிறது.

இதனால் பல கொப்பரை கலன்கள் வெறிச்சோடியபடி உள்ளது. தற்போது பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியிலிருந்து நாளொன்றுக்கு சுமார் 200 டன்னுக்கும் குறைவான கொப்பரைகளே வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், வெயிலின் தாக்கம் ஏற்பட்டு ஈரப்பதம் குறைந்தால் மட்டுமே கொப்பரை உற்பத்தி அதிகரிக்கும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.