அரசியல் சட்டத்தின்படி பல்கலை.கள் அமைத்து நிர்வகிக்கும் பொறுப்பு மாநிலங்களுடையது: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு
திருவனந்தபுரம்: மாநில கவர்னர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் பல்கலைக்கழக விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வர ஒன்றிய அரசு தீர்மானித்துள்ளது. இது குறித்த தேசிய மாநாடு நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியது: பல்கலைக்கழக மானியக்குழுவில் ஒன்றிய அரசு கொண்டுவர தீர்மானித்துள்ள மாற்றங்கள் உயர்கல்விக்கு ஆபத்தை விளைவிக்கும். இது மாநில உரிமைகளை பறிப்பதாக உள்ளது. கூட்டாட்சிக்கு எதிரானதாகும்.
இந்த விதிமுறைகளுக்கு எதிராக அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இது மாநில சட்டங்களை அபகரிக்கும் செயல். மேலும் பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் அனுதாபிகளை நுழைக்கும் செயல் ஆகும். ஒன்றிய அரசின் அரசியல் விருப்பத்திற்கு ஏற்ப இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசியல் சட்ட அட்டவணை 7 பிரிவு 32ன் படி பல்கலைக்கழகங்களை அமைத்து நிர்வகிப்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநில உயர்கல்வித்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.


