Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தவெகவில் சேருகிறாரா? விஜயதரணி பதில்

நாகர்கோவில்: முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி தவெகவில் சேருகிறாரா என்பது குறித்து பதில் அளித்தார். முன்னாள் எம்எல்ஏ எஸ்.விஜயதரணி தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்து, விளவங்கோடு தொகுதியில் மூன்று முறை (2011, 2016, 2021) எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக பணியாற்றினார். தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவியாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு தலைமைப் பதவிகள் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி 2024 பிப்ரவரி 24ல், பாஜவில் இணைந்தார். எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்த அவருக்கு அக்கட்சியில் குறிப்பிட்ட பதவிகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. கடந்த மக்களவை தேர்தலில் அவர் கன்னியாகுமரி தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனாலும் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. அண்மையில் பா.ஜ தமிழ்நாடு தலைமையில் மாற்றம் செய்யப்பட்ட வேளையில் புதிய நிர்வாகிகள் பலரும் நியமிக்கப்பட்டனர். ஆனால் விஜயதரணிக்கு இதில் பொறுப்பு ஏதும் வழங்கப்படவில்லை. இந்தநிலையில் அவர் தவெகவில் இணைய இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுதொடர்பாக விஜயதரணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: அமித்ஷாவை அண்மையில் சந்தித்திருந்தேன். அவர் தேசிய தலைவர் தேர்தல் முடிய வேண்டும், அதன் பிறகு நல்ல அங்கீகாரம் வரும் என்று கூறியுள்ளார். அண்மையில் பொறுப்புகள் நியமனம் நடைபெற்றதில் நான் எதனையும் கேட்கவில்லை. தேசிய தலைவர் தேர்தல் முடிந்த பிறகு புதிய நியமனங்கள் நடைபெறும். விஜய் கட்சியில் சேரப்போவதாக யாரோ கிளப்பி விட்டுள்ளார்கள்.

அதிமுக - பாஜ கூட்டணியை ஆதரித்து நான் பேசுவதால் இதனை செய்துள்ளார்கள். வேண்டுமென்றே சிலர் இதனை செய்கின்றனர். அப்படி எல்லாம் இல்லை. மிகவும் தவறான செய்தி. ஏன் இவ்வாறு கிளப்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு கட்சியில் வளர்ந்து வருகிறோம், அதனை கெடுக்க எதையாவது செய்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். பாஜவில் சேருவதற்கு முன்பும் டெல்லியில் முகாமிட்டு இருந்த விஜயதரணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக மாட்டேன் என்று கூறிவிட்டு, மறுநாள் பாஜவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.