தவெக ஆட்சியில் தமிழகத்தில் சிறுவர்கள் மாயமாவது சர்வ சாதாரணமாகி விட்டது.!! எம்பி கனிமொழி குற்றச்சாட்டு
சென்னை: தூத்துக்குடியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வந்த ஜீவா (13) என்ற மாணவர் கடந்த அக்டோபர் 30 அன்று மாலை விடுதியிலிருந்து மாயமானார். தங்கள் மகனை மீட்டுத் தருமாறு பெற்றோர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். தவெக ஆட்சியில் சமீப வாரங்களாக சிறுவர், சிறுமியர் தொடர்ந்து மாயமாகி வருகின்றனர். இந்த சூழலில் தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் சிறுவர்கள் காணாமல் போவது சர்வ சாதாரணமாகிக் கொண்டிருப்பதாக திமுக எம்பி கனிமொழி சாடியுள்ளார்.
இது தொடர்பான எக்ஸ் பதிவில் அவர் கூறியுள்ளதாவது, "தூத்துக்குடியில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கிப் படித்து வந்த 8-ஆம் வகுப்பு மாணவன் காணாமல் போய் நான்கு நாட்களாகியும் மாணவனை இதுவரை காவல்துறை கண்டுபிடிக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் சிறுவர்கள் காணாமல் போவது சர்வ சாதாரணமாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே செஞ்சி சிறுமி காணாமல் போய் 20 நாட்களுக்கு மேலாகியும் கண்டுப்பிடிக்காத காவல்துறை, தூத்துக்குடி மாணவன் காணாமல் போன விவகாரத்திலும் மெத்தனமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இனியும் காலம் தாழ்த்தாமல் விரைந்து செயல்பட்டு மாணவனை கண்டறிய வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.


