Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தைலாபுரம் தோட்டத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; பாமகவில் இருந்து அன்புமணி சஸ்பெண்டா..? ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ராமதாஸ் அதிரடி திட்டம்

விழுப்புரம்: தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ராமதாஸ் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சமூக நீதிக்காக தொடங்கப்பட்டதாக கூறப்படும் பாமகவில் தலைவர் பதவிக்கான நாற்காலியை பிடிக்க தந்தை, மகனிடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வராமல் நீண்டு வருகிறது. உயிரோடு இருக்கும்வரை பாமகவிற்கு நான்தான் தலைவர் என்று அறிவித்த ராமதாஸ், அன்புமணியை செயல் தலைவராக நியமித்துவிட்டு தைலாபுரம் தோட்டத்தில் நிர்வாகிகளை தினசரி சந்தித்து கூட்டம் நடத்தி வருகிறார். மற்றொரு பக்கம் அன்புமணியோ பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட தானே தலைவர் பதவியில் தொடர்வதாக கூறி விடாபிடியாக மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்குழு கூட்டம் நடத்தி வருகிறார்.

இதனால் மகன் அன்புமணியின் ஆதரவாளர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடியாக நீக்கி, புதியவர்களை நியமித்து வருகிறார். மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மாநில பொருளாளர், மாநில பொதுச்செயலாளர் என்ற வரிசையில் தற்போது 2 எம்எல்ஏக்களின் கட்சி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. பாமகவில் 78 மாவட்ட செயலாளர்களையும், 61 மாவட்ட தலைவர்களையும் இதுவரை மாற்றி புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். தைலாபுரம் தோட்டத்திலிருந்து ராமதாஸ் நீக்கம் செய்த பட்டியல் வெளியானதும், பனையூர் தோட்டத்திலிருந்து அந்த பதவியில் தொடர்வார்கள் என்று அன்புமணியின் அறிக்கை மற்றொரு பக்கம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் ராமதாஸ் நான் நியமித்த பொறுப்புகள்தான் இறுதியானது.

யாரும் அதனை நீக்க முடியாது, மாற்ற முடியாது. எனவே புதிதாக நியமனம் செய்த நிர்வாகிகள் தைரியமாக செயல்படுங்கள் என்று உற்சாகப்படுத்தி அனுப்ப அவர்களும் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் மாவட்டந்தோறும் பாமகவில் தந்தை அணி, மகன் அணி என்று இருகோஷ்டிகளாக செயல்பட தொடங்கியுள்ளனர். இரு கோஷ்டியாக செயல்படும் பாமகவினரால் நிர்வாகிகள், தொண்டர்கள் எந்த அணிக்கு செல்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி வருகின்றனர். இரு அணிக்குமிடையே மோதல் ஏற்படும் சூழலும் பல இடங்களில் நிலவி வருவதால் பாமகவின் நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டு அவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், புதிய நிர்வாகிகள் கூட்டத்தை ராமதாஸ் கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர், தலைவர் உத்தரவை மீறியும், கட்சி கட்டுப்பாட்டுக்கு எதிராக செயல்படுவதால் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது, பொதுக்குழு கூட்டம் கூடுவதற்கான தேதியை முடிவெப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை ராமதாஸ் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. கட்சியிலிருந்து அன்புமணியை சஸ்பெண்ட் செய்யலாம் அல்லது செயல் தலைவர் பதவியை பறிப்பது அல்லது வேறு ஏதேனும் நடவடிக்ைகக்கு உட்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ராமதாஸ் முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாளை வியாழக்கிழமை என்பதால் ராமதாசின் வழக்கமான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

ராமதாஸ் - சரஸ்வதி 60ம் ஆண்டு திருமண நாளில் அன்புமணி ஆப்சென்ட்

பாமக நிறுவனர் ராமதாசின் 60வது திருமண நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு ராமதாஸ்- சரஸ்வதி இருவரிடமும் ஆசி பெற ராமதாசின் மூத்த மகள் காந்திமதி, அவரது மகன் சுகந்தன் மற்றும் முகுந்தன் ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் இளைய மகள் கவிதா, அவரது குடும்பத்தினர் நேற்று தைலாபுரம் இல்லத்துக்கு வந்து ராமதாஸ், சரஸ்வதியிடம் ஆசிபெற்று திருமண நாளை கொண்டாடினர்.

ஆனால் ராமதாசின் ஒவ்வொரு திருமண நாளின்போதும் தைலாபுரம் இல்லத்துக்கு குடும்பத்துடன் வரும் அன்புமணி இந்தாண்டு அதை தவிர்த்து விட்டார். கட்சிக்குள் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு முற்றியிருப்பதன் காரணமாகவே பெற்றோரிடம் அவர் ஆசிபெற வரவில்லை என தெரிகிறது. தந்தை மீதான அன்புமணியின் கோபத்தை அவரது குடும்பத்தினரே மேலும், மேலும் அதிகரித்து வருவதாகவும், இதனால்தான் சொந்த தாய்- தந்தையின் 60வது திருமண நாளில்கூட அவர் பங்கேற்கவில்லை என்றும், அன்புமணியின் மகள்களும் கலந்து கொள்ளவில்லை என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அன்புமணியின் தலைமையில் கொண்டாடப்படும் ராமதாஸ் திருமண நாள் விழா இந்தாண்டு அவர் இல்லாத நிலையில் தைலாபுரம் தோட்டம் சோகமடைந்தது என்றும், இருப்பினும் அதை ஈடுசெய்யும் வகையில் ராமதாசின் ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து ராமதாஸ்- சரஸ்வதி ஆகியோரின் திருமண நாளை வெகு விமரிசையாக கொண்டாடியதாகவும், இதைப் பார்த்து ராமதாஸ் மனம் உருகிப் போனதாகவும் கூறப்படுகிறது. தந்தை நூறாண்டு காலம் வாழ வேண்டுமென்று மேடையில் பேசிய அன்புமணி, ராமதாசின் 60வது திருமண நாளில் ஆப்சென்ட் ஆகி பெற்றோரின் கோபத்துக்கு ஆளாகி இருப்பதாகவும், வன்னியர்களின் கடவுளாக ராமதாஸ் பார்க்கப்படும் நிலையில் அன்புமணி மீது கடுமையான விமர்சனங்கள் அக்கட்சி வட்டாரத்தில் பரவலாக எழத் தொடங்கியுள்ளது.